பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

அறிஞர் அண்ணா நினைவஞ்சலிபனிமலைக்கு அடுத்து, வெகு தூரத்தில் கடலின் மேல் மட்டத்திற்கு வந்தேன். அங்கே பவழ மலைகள் காணப்பட்டதைக் கண்டேன்.

அத் தீவுகள், மிகக் குறுகிய அளவிலிருந்தாலும், அது - இந்த விரிந்த உலகத்திலிருக்கின்ற மக்கள் மதிக்கின்ற பவழத்தையும் வைத்துக் கொண்டிருக்கிறது.

பவழப் பூச்சிகள் உருவாக்கிய கூடுகள், இயற்கையின் பஞ்சபூதக் கட்டளையால் இறுகிவிடும்போதுதான், அவை நமக்குப் பவழங்களாக ஆகின்றன.

அந்தப் பவழங்களுக்கு மத்தியில், துளைகளை இட்டு, ஆரமாக்கிக் கொள்வதுதான் கலையறிந்தோர் செய்ய வேண்டிய பணியாகும்.

அறிஞர் அண்ணா அவர்கள் பவழப் பூச்சிகளின் கூண்டுகளைப் போல மிக விலையுயர்ந்தவராக இருந்தார்.

மிகச் சுலபமான இடக் கட்டத்திலும் - காலக் கட்டத்திலும் கிடைக்கக் கூடிய பொருளாக, அவர் இல்லை.

இயற்கையின் நெசவு வேலையால் ஆக்கப்பட்டவர், அவரை துன்பத்திற்கிடையில் கண்டுபிடிப்போருக்குத் தன்னுடைய பவழக் கூட்டையே ஒப்படைத்து விடுகிறார்.

பொதுவாகப் பவழக் கூடுகளைப் பெற விரும்புவோர்கள் - உயிரைப் பணயம் வைத்துக், கடற்பயணம் செல்ல வேண்டும்.

அண்ணாவின் அன்பு என்ற பவழத்தை அடைய விரும்புவோர்களும், தங்களுடைய உடைமைகளை இழந்து - சமுதாய நெரிச்சலினால் நொந்து போயிருக்கிறார்கள்.

தமிழர் தொடுத்த மொழிப் போராட்டத்தில், அண்ணாவின், திட்டங்களைச் செயல்படுத்த முனைந்தவர்கள், பவழக் கூட்டைத் தேடிச் சென்ற கடற்பயண வீரர்களைப் போல, தங்களது உயிரையே காணிக்கையாக்கி இருக்கிறார்கள்.