பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


11. அண்ணா ஒரு நிலா!

வசந்த காலத்தின் வரவை நம்பி, முளைகள் ஏற்கனவே தளிர்விட ஆரம்பித்தன.

குருத்துவிட்டுக் கிளம்பிய கனிகள் - சிறு குழந்தைகளின் உதடுகளைப் போல், எந்நேரமும் திறந்த வண்ணமே இருந்தன. பச்சைக் கிளிகளின் குஞ்சுகள் - கிளைகளில் குந்தி யிருப்பதைப் போலத் தளிர்கள் இருந்தன.

உதயசூரியன் மதிய ஒளியனான பிறகு, உழைத்துக் களைத்த மகனுக்கு ஆறுதல்கறி - அன்பு காட்டும் தாய்போல - அந்தி, மாலை நேரத்தில் சூரியனை அழைத்தது.

குறளில் அடங்கும் ஒப்பற்ற பொருளைப்போல், சூரியன் அந்திக்குள் அடங்கினான்.

விளக்க முடியாத துன்பத்தால் இருண்டு போயிருக்கின்ற விதவையின் உள்ளம்போல் - உலகின் மேல் இருள் கவிழ்ந்தது.

வானம் அப்போது நிர்மலமாக இருந்தது. காலமறிந்து தாக்குவதற்காகப் படை வீரர்கள் பதுங்கிப் பதுங்கி, எதிரியின் எல்லையை எட்டிப் பார்ப்பதுபோல் - விண்மீன்கள், ஒவ்வொன்றாகத் தலையைக் காட்டின.

அவற்றின் கண்கள் சிவந்திருந்தன. நெடுந்துரத்தில் செல்லுகின்ற தீவட்டிக் கொள்ளைக்காரர்களைப்போல, சில நேரத்தில், விண்மீன்கள் தெரிய ஆரம்பித்தன.