பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

183



தொடுவானைப் பிற்பகுதியாக வைத்து, முன்னே வரிசையாகத் தென்னை மரங்கள் இருக்குமானால். அவை நிழலுருவத்தில் நிற்கும்; நேர்த்தியாகத் தெரியும்.

அண்ணாவுக்கு முன்னால், இருண்டவனும் நேர்த்தியாகிறான். ஒளிவட்டமாகிறான்.

இது தொடுவான் செய்கின்ற ஜாலவித்தை!

தொடுவானைத் தொட்டப்படி ஒரு ஜீவநதி வருமானால் - அது, பூமியின் தலையில் கட்டப்பட்ட, கூந்தல் நாடாவாகத் தெரியும்.

அண்ணாவை தொட்டபடி எவனாவது வருவானானால் - அவன், தலைக்கு அழகாக இருக்கும் பட்டு நாடாவாகத்தான் தெரிகிறான்.

தொடுவானை ஒட்டி, ஒர் ஒளி இருக்குமானால், அது வானத்திற்கு, நிலத்திலே வைக்கப்பட்ட கண்ணாடியாகத் தெரியும்.

அண்ணாவுக்கு அருகில், அற்ப அலைகளால் துள்ளாத ஏரியைப்போல - ஒருவன் இருப்பானேயானால், அவன் முகம் காட்டும் கண்ணடியாக விளங்குவான்.

தொடுவானை எட்டி ஒரு பரந்து விரிந்த வயலிருக்குமானால், அது நிலா மங்கைக்கு கரைத்து வைக்கப்பட்ட, மரகதப் பாலாகத் தெரியும்.

அதைப்போல, அண்ணாவின் பக்கத்தில் வயலாக விரிந்தவன், குளிர்ந்த குணத்துக்கு கரைத்து வைக்கப்பட்ட அமுதாகத் தெரிவான்.

தொடுவானுக்கு அருகில், ஒரே ஒர் ஒற்றைத் தென்னை மரம் இருக்குமானால், அண்ணாவுக்கு முன்னால் வெட்ட வெளியில் தனியாக இருப்பவன் விளம்பரமில்லாத நிமிர்ந்த தம்பியாகவே மாறுகிறான்.

நசுக்கினாலும் நசுங்காத நாகரீகம் போல.