பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

இயற்கையின் இந்தக் குடியாட்சி முறை நாட்டில் நடை முறைக்கு வரக்கூடாதா?’ என நெஞ்சம் ஏங்குகிறது?

புலவர் கலைமணி அவர்களுடைய உரைநடையே கவிதை நடையாகச் சிறந்துள்ளது. எடுத்துச் சொல்லும் முறையிலே ஒரு புதியபோக்கு; நெஞ்சில் நிற்க தக்கவாறு தக்க எடுத்துக் காட்டுகள் - இவை நூல் முழுதும் பளிச்சிடுகின்றன. சான்றுக்குச் சில :

"மழைத் தோளால் நெய்யப்பட்ட பனித்திரையைக் கதிரவனுடைய கூரீட்டிகள் ஊடுருவின! அதன் விளைவு? வானவில் வண்ணங்காட்டி மேற்கில் சிரித்தது"- ஓவிய நடை இது.

"பாம்பாட்டி தன் கூடையில் போட்ட பாம்பை, கூடையின் மூடியைத் திறக்கும் போதெல்லாம், அந்த அரவம் தலையை நீட்டுவதைப் போல, எனதுள்ளம் திறக்கப்படும் போதெல்லாம், என்னுடைய ஆசைகள் தலை நீட்டுகின்றன" - இஃது எடுத்துக்காட்டு நடை.

"கதிரவனே! அடிவானத்தில் நீ தொட்டில் இட்டுக் கொண்டிருக்கிறாய்! வானத்தின் சிம்மாசனத்தில் நீ மதியத்தில் அமருகின்றாய்! அந்திநேரத்தில் கண் சிவந்த வீரனைப் போலக் காட்சி தருகிறாய்! உனக்கிருக்கும் பண்பால் இரவில், நிலவிற்கு வழிவிட்டுப் போய் மறைகிறாய்"- கற்பனை நடைக்கு இஃது ஒரு காட்டு.

"தொடுவான் இல்லையென்றால், உலகத்தில் கோழிக் குஞ்சுகளான மக்களுக்கு வானம் போன்ற கூடை கிடைக்காது” - உருவக நடை இது.

எங்கள் இலட்சியமே அறிஞர் அண்ணாதான்!

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் அறிஞர் அண்ணாவே என்ற எண்ணம்தான்!

கடிக்க நனி சொட்டும் கரும்பு!

மோப்ப மணக்கின்ற மலர்!