பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தமிழ் உலகிற்கு
ஒரு வரம் இந்த நூல்!
புலவர் நாக சண்முகம்

கவிதை, காவியம், அறிவு, ஆய்வு, வாழ்க்கை, வரலாறு, புதினம், போதனம் என்று எத்துறையை அடித்தளமாகக் கொண்ட நூலாக இருப்பினும், அதனைப் படிக்கத் தொடங்குகின்றபோது, அதில் உள்ள இன்றியமையாத வரிகளை எழுதுகோலால் கோடிட்டுச் செல்வது சிலர் வழக்கம்.

ஆனால், அன்புச் சகோதரர் என்.வி.கலைமணி அவர்களின் அண்ணா நினைவஞ்சலி என்ற இந்த நூல், அந்த மரபிற்கு முற்றிலும் மாறுபட்டதாக விளங்குகிறது.

இந்த நூலில் எந்த இடத்தில் கோடு போடுவது, எதை விடுவது என்ற நோக்கினால், முதல் பக்கம் தொடங்கி, முற்றும் என்று நிறைவு பெறுகின்ற பக்கம் வரை கோடு போட்டுக் கொண்டே போக வேண்டிய அதி அற்புதமான, ஒருவகை விசித்திரமான உள்ளடக்கத்தை உடையதாக இது திகழ்கிறது.

இவர் எழுது பொருளாகக் கொண்டது அறிஞர் அண்ணா என்னும் இமயம் என்றால், இவர் பக்கத்திற்குப் பக்கம் பல சிகரங்களை அல்லவா தொட்டுச் செல்கிறார்.

விந்தையான, வித்தகமான, சத்தியமான, சந்தம் மிகுந்த பல நடைகளை நான் பார்த்திருக்கிறேன். இவர் எந்த நடைக்கும் அப்பாற்பட்ட சொந்த நடை உடைய சூட்சுமக்காரராக விளங்குகிறார்.

இவருடைய கூரிய சொற்களைப் பார்க்கிறபோது, ராமனுடைய வில்லிலிருந்து புறப்படும் அம்புகளே நினைவிற்கு வருகின்றன.

அதோடு, சகோதரர் கலைமணியை நினைத்தால், கம்பர் பெருமான்தான் நினைவிற்கு வருகிறார்.