பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

41கறையற்ற அறிஞனுக்குக் "காலம்" என்று, நான் பெயர் சூட்டுகிறேன்.

யாரையும் உற்பத்தி செய்து பாரின்மீது உலவ விட்டு; 'நடத்து உன் நாடகத்தை’ என்று காலம் கூறுகிறது.

அதைக் கடவுள் பக்தன் அனாதி என்கிறான்.

'இதற்காகவே பிறந்தேன்' என்று அறுதியிட்டு உறுதியாக வாழ்ந்து வந்த அறிஞனை, காலகாலத்தின் சுழி-காலத்தின் வேகம் என்று, ஏன் கூறக்கூடாது?

பிறக்கப்போகும் கருவுக்குள், அறிஞர் அண்ணாவினுடைய நினைவு; கொப்பூழ் கொடி வழியாக, உணவோடு உணவாகச் செல்கிறதென்றால்,

இது, பத்து மாதத்தில் நடைபெறுகின்ற தெய்வீக விசித்திரம் என்பதன்றி, வேறென்னவென்று கூறுவது?

விதியென்பது, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்றென்று வேதாந்தி கூறுகிறான்.

அவ்வப்போது சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்புடையதை-மதி என்று சித்தாந்தி கூறுகிறான்.

மதிக்கும் விதிக்கும் பொதுவாக இருக்கின்ற காலம்; அண்ணாவை - இரு சாராருக்கும் அளிக்கிறது.

சிற்பியினிடம் கிடைத்த கல், உளியின் போராட்டத்தில் துவண்டும் - இளைத்தும், பிறகு உருவம் பெறுகிறது.

விதியின் இடது கைக்கும், மதியின் வலது கைக்கும் கிடைக்கப்பெற்ற அண்ணா, சிற்பியின் கல்பெறும் உருவம் போல வரலாற்றுக்குரிய மையப் புள்ளியாக மாறுகிறார்.

விதி விமர்சனம் செய்கிறது - மதியும் விளக்கம் கூறுகிறது.

முடிவில், அண்ணா - அண்ணாவாகவே இருக்கிறார்.

அவர் ஒரு காலமாக இருப்பதால்தான், குளிரில் பூத்துக் கோடையில் கருகாத, வாசனைப் பூண்டாக; மலராமல் இருக்கிறார்.