42
அறிஞர் அண்ணா நினைவஞ்சலி
சரித்திரம் சடங்கு செய்து பூஜிக்கும் தெய்வீகமாக அண்ணா நிற்கிறார்.
தெய்வீகம் என்ற சொல்லை, நான் வைதிக நினைவோடு கையாளவில்லை.
உலக நெறியின் மூத்த முதல் தந்தையான வள்ளுவப் பெருமான் குறிப்பிட்ட, 'மாறா இயற்கை' என்ற பொருளிலே தான், கையாள்கிறேன்.
அறிஞர் அண்ணாவின் தலைமையால், நாடும் - மொழியும் உறக்கம் தெளிந்தன என்பதைக் கட்சிக்குப் பிறந்தவனைத் தவிர - தாய்மைக்குப் பிறந்தவன் ஒப்புக் கொள்கிறான்.
நாடும் - மொழியும், ஒரு சமுதாயத்தின் ஆத்மா என்று - மொழி நூல் வல்லுநர்கள் மொழிகிறார்கள்.
அதனை உறக்கம் தெளிவிக்க வேண்டியது அறிஞனுடைய சுபாவம் - என்றுகூடச் சொல்லாம்.
அப்படிப்பட்டவனைவிட, அண்ணா என்ன செய்தார் என்றால், ஈவு ~ இரக்கம் - கருணை - அருளை - தன்நெஞ்சில் பாத்திக்கட்டி வளர்த்தார்.
அதுமட்டுமல்ல, பொட்டல் காட்டிலே புதையலை எடுத்தார்.
குப்பை மேட்டைக் கோபுரமாக்கினார். சப்பைகளை சாம்சன் என்ற நிலைக்குக் கொண்டு வந்தார்.
அண்ணா எல்லாருடைய நரம்புகளிலும் ஓடும் சிவப்பு அணுக்களுக்காக நிற்கிறார்.
ஒரு மனிதனை சாவு விழுங்கும். அதைக் கண்டு சுற்றம் அழும் - சந்ததி தேம்பும்.
இறந்தது பிழைப்பதில்லை என்று தெரிந்த பிறகும், கண்கள் அழுகின்ற புத்தியை விடுவதில்லை.
மனித குணங்கள் சூழ்நிலையில் சாகும்போது - அண்ணா அழுதார்.