பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

அறிஞர் அண்ணா நினைவஞ்சலிஆண்டவன் கைதி; அவனுக்காகக் கண்ணிர் விடுகிறான்.

இந்தத் தத்துவ முப்பட்டை கண்ணாடி வழியில் தெறித்து விழுந்த வண்ணச் சிதறல், அண்ணாவில் புதைந்திருக்கின்ற ஆற்றொழுக்கான பண்புகளை; நமக்கு விளக்கிக் கொண்டிருக்கின்றன.

இப்போது; அவர் ஆண்டவன் கைதி, அரசாங்க கைதிகளுக்காக வருந்திக் கொண்டிருக்கிறார்.

காலத்தைப் பறக்கும் மீன் என்றுகூடக் கூறலாம்.

அது ஊழிக் கடலில் துள்ளியெழுந்து - அங்கேயே மறுபடியும் விழுகிறது.

நிலத்திற்கு அது வருவதில்லை.

அண்ணாவும் ஊழியில் தோன்றி அங்கேயே ஒடுங்கினார்.

நிலத்திற்கு இனி திரும்பவே மாட்டார்.

நான் என் உடைகளைக் களைந்து எறிந்துவிட்டேன்.

நான் இப்போது நிர்வாணி.

உடையில் குற்றமிருந்தால் என் பொறுப்பு.

நிர்வாணத்தில் குற்றமிருந்தால் நித்தியன் பொறுப்பு.

இது அண்ணாவின் கடைசி தத்துவ விளக்கம்.

அவர் போட்டிருந்த உலகச் சட்டையை, உரிந்து போட்டுவிட்டார்.

அவருக்காகப் பாடிவந்த பறவைகள், ஆளில்லாத காரணத்தால் - தத்தம் குஞ்சுகட்கே பாடுகின்றன.

அவருக்காகப் பூத்த மலர்; யாருடைய சட்டைக்கோ செல்கிறது.

அவர் போன பாதையில் மாரிக்கால இருட்டு தவழ்கிறது.

காலத்தின் மடியில் அவர்! ஏன், தானே - ஒரு காலமாகத் தவழ்ந்து கொண்டிருக்கிறார்.