பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி



வானவில்லின் விளிம்புகளில் நின்றவாறே, நான் வையத்தை நோக்கினேன்!

நான் உயரமானவன்! மிகமிக உயரமானவன்! உலகத்தை விட உயர்ந்தவன் - என்ற தற்பெருமை கொண்டேன்!

பூமியின் கரடுமுரடான முகத்தை கண்டேன், கிண்டல் செய்தேன்!

இவ்வாறு ஒரு நொடியில் நான் நினைத்தேன்! ஆனால் மறுநொடியில் ...!

வில் உடைந்தது! எந்தப் பூமியை நான் ஏளனம் செய்தேனோ, அதே பூமியிடம் நான் சரணாகதியடைந்தேன்

தலை குப்புற வீழ்ந்தேன்! கீழிருந்தவாறே வானை நோக்கினேன்!

வெற்றி பெற்றவனிடம், தோற்றவன் தனது தோல்வியை மறந்து; எரிச்சலால் ஏசுவதைப் போல, நானும் வானை ஏசினேன்!

என்னைச் சூழ்ந்து நின்றவர்கள், எனது அறியாமையைக் கண்டு இரங்கினார்கள்.

நான் மட்டும் என் குற்றத்தை மறந்தேன்.

ஆனாலும், 'முயற்சி திருவினையாக்கும்' என்ற குறள் - எனக்கு மீண்டும் புதுவலிவை ஊட்டியது!

ஏறிய தகுதி இறங்கிய பிறகு - ஒருவன் மனம் போனவாறு பேசுவது - மனித இயற்கை என்பதை; ஒருவாறு உணர்ந்தேன்.

வானவில்லை; மீண்டும் நான் அடைய முடியாதுதான். அதனால் - அதன் பெருமையை உணர்ந்தபடியே சிந்தித்தேன்!

தத்துவங்கள் பலவற்றைக் கொண்ட வானவில், என் அறிவின் தலைவனுக்கு ஈடாகுமோ என்று எண்ணினேன்!

என் எண்ணத்திற்கு வந்த கருத்து அலைகளிடையே நான் சிக்கித் தத்தளித்தேன்.

அவா ஒரு கானல் நீர்!