பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி
ஆம்! என்றது அந்த மலர். எதற்காகச் சிரித்தாய்? கேட்டேன்.

'இங்கே வா' என்றது; அந்த ஊதா மலர்.

நிலையிழந்த மனிதா! இயற்கைக்கு வாயில்லை பேச. ஆனால், அந்த இயற்கையை மாயமெனக் கூறுகிறாயே.

உன் நினைவுகளுக்குப் பதிலளிக்காததால், அவ்வாறு கூறுகிறாயா? இதை இயம்ப எத்தனை ஏடுகளைப் படித்தாய்?

அவாவின் சிறகுகள் அளவிலாத் தொலைவுவரை சிறகடித்துச் சேர்ந்து தொங்கும்போது, அவனியே மாயம் என்கிறாய்.

வானை நோக்கிக் கையேந்தி நிற்குமாறு உன்னைக் கூறியது யார்?

வானம் வழங்காவிட்டால்; அதை மாயமென்று உன்னைச் சொல்லச் சொன்னது யார்?

இட்டதைப் பெரிதென்பான் மனிதன்! இடாததை இழிவென்பான்? அஃது உனக்கும் உரிய நியதியோ!

சிறிது நேரத்திற்கு முன்பு வானவில்லை மாயம் என்று சீறினாயல்லவா?

வானவில்லில் இருக்கின்ற வண்ணங்களிலே ஒரு நிறம் நான்.

என் ஊதா மேனியைப் பார்! நான் மாயையா? தொட்டுப் பார்த்துக் கூறு.

அவாவைப் பற்றிக் கதைகளை அளந்தவனே, ஒழித்தாயா நீ - அவாவை?

அவாவை அழித்தான் சித்தார்த்தன். அவன் 'புத்த”னான கதை தெரியுமா உனக்கு?

காலையில் ஒருநாள்; கபிலவாஸ்துச் சோலையிலே; அவன் மன்னனாக இருந்தபோது வந்தான்.

மாலையிலே நான் காம்பொடிந்து செடிக்குக் கீழே விழுந்து கிடந்தேன்.

கண்டான் காவலன்! மருண்டான் எனைப் பார்த்து. சிந்தனை வளையம் சுழன்றது அவனுக்கு.