பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி.கலைமணி

69


அது போலவே, அவரின் இதயபூர்வமான - உண்மையான - மக்கட்தொண்டு - இன்னும் சிலரால் உணர்ந்து உலகுக்கு உரைக்கப்படவில்லை!

காலம் அந்தச் சிலரது விழிகளைக் கட்டளையிட்டுத் திறந்தே தீரும் என்பது உறுதி!

தமிழகத்திலே தோன்றிய மாதவிக் கொடி, ஆங்கிலமறிந்த உலக ஆய்வாளர்களால்; ஆராயப்படுகிறது! போற்றப்படுகிறது!

அதுபோலவே, உலகம் ஆராய்ந்து போற்றும் நிலையை அவர் ஒர் நாள் பெறுவார்!

சாதாரண ஒரு மாதவிக் கொடி; இலக்கியத்தில் இடம் பெற்றுவிட்டதைப் போல; அவரும் உலக இலக்கியமாகத்தான் திகழப் போகிறார்!

பச்சை நிறம், வளத்தைக் காட்டும் வண்ணம்! அது, அவரது பண்பாட்டு வளத்தை அவனிக்கு அறிவித்தே தீரும்:

ஞாலம் அவர் புகழ் பின்னே ஓடிவரும் காலம், மிகத் தொலைவில் இல்லை தம்பி!

பச்சையை நீ மாயை என்றால்; பார் நம்புமா? பேதை மானிடனே! அது மட்டுமா?

வெற்றிலை போட்டறியாது! ஆனால், வாய் சிவந்திருக்கும்! கொவ்வைக் கனியருந்தும், கொஞ்சு மொழிகள் பேசிடும்! அந்த அஞ்சுகத்தின் நிறமும் கூடப் பச்சையன்றோ!

கண்ணின் கருமணிகள் குளிர - காட்சி பல வழங்கி; மண்ணில் தெரிகின்ற முதல் நிறமும் பச்சைதானே...!

பச்சைத் தழைகட்டி, பந்தலை உருவாக்கி, இருமனமும் ஒருமனமாய் இணைந்து பிணைகின்ற இன்பத் திருமணத்தில் காட்சி நல்குவதும் கவின் பச்சை!

இந்த இன்ப நிறத்தைப் போய் எத்திற மனங்கொண்டு மாயை என்கிறாய்?