பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

79


பொன்நிறமான வேங்கைப்பூ நறுமணமிக்கது. பெண்கள் அதனைப் பெரிதும் விரும்பிக் கொய்யச் செல்வர்.

பறிக்கச் சென்ற பூவையர் அப்போது 'புலி புலி' என்று பூசல் புரிவர்!

வேங்கையெனும் சொல் 'புலி’ என்ற மிருகத்தையும் குறிக்குமல்லவா?

அதனாலே, அம்மங்கையர் அவ்வாறு பூசல் செய்வர். ஆனால், அதற்கும் காரணமுண்டு.

பூ மலர்ந்த வேங்கை மரம் புலியை ஒத்திருக்கும். அதனால் வேங்கை மரம் பூவினைப் 'புலிப்பூ என்பர் பாவையர்.

வேங்கை மரத்தில் புலி போன்ற வண்ணப் புள்ளிகளோடு பூ மலர்கின்றன.

'புலிப்பொறி வேங்கைப் பொன்னினர் கொய்து' 'ஐங்குறுநூறு' என்று இலக்கியம் கூறுகிறது.

'புலி உரி இரி அதற்கடுப்பக் கலி சிறந்த நாட்பூ வேங்கை நாள் மலர் உதிர்' என்று அகநானூறு செய்யுள் அறிவிக்கிறது.

‘கருங்கால் வேங்கை வீயுகு துறுகள், இரும்புலிக் குருளையிற்றோன்றும்' குறுந்தொகையில் காணப்படுகிறது.

வேங்கைப் பூ, புலியை ஒத்திருப்பதனையறிந்த வேல்விழியர், பூ பறிக்கும்போது, 'புலிபுலி'யென ஆரவாரிப்பர்.

இதனைத் தமிழ் இலக்கியங்கள் அழகாக இயம்புகின்றன.

“மன்ற வேங்கை மலர்தம் நோக்கி, ஏறாதிட்ட ஏமப்பூசல்” என்று 'குறுந்தொகை' நூலும்.

"தலைநாள் பூத்த பொன்னினர் வேங்கை, மலைமார் இடுஉம் ஏமப்பூசல்” என்று 'மலைபடுகடாம்' எனும் நூலும் கூறுகிறதே.

பாவையர் மட்டுமே வேங்கைப் பூவைக் கண்டு ஆரவாரமிடவில்லை. வேழமே அஞ்சி மருண்டுள்ளது.