உயிர் அடங்கிய உடல்போல, சவக்களை தட்டிய முகத்தோடு, இரவு, உலகத்தின் மேல் மொய்த்துக் கொண்டிருந்தது.
இருளில் ஒடிக்கொண்டிருக்கும் ஆற்றின் மீது அடிவானம் தோய்ந்து கொண்டிருந்தது.
அடிவானத்தின் விளிம்பெல்லாம், தூக்கத்தில் சிரிக்கின்ற குழந்தையின் புன்முறுவலைப்போல - ஊமை மின்னல்கள் இங்குமங்கும் ஒடிக்கொண்டிருந்தன.
செறிந்த தென்னங் கீற்றின் வழியாகத் தென்றலின் பவனி வருகிற பொழுதெல்லாம் கீற்றுகள் சந்தம் பாடின!
அந்தி சாய்கிற வரையில், கவலையேற்றத்தின் வாயிலாக, கழனிக்கு நீர்ப்பாய்ச்சிய உழவர்கள் சென்றுவிட்டபிறகு ஏற்ற வாய்க்காலில் இருந்து கழனிக்கு ஓடிவரும் தேங்கிய நீர், சிறிய மடிப்பலைகளோடு அங்கங்கு சிலிர்த்துக் கொண்டிருந்தது.
நிலவற்ற அந்த நீல வானத்தில், நித்திலங்கள் கூட்டம் கூட்டமாக இருந்து பூமியை உற்று நோக்கிக் கொண்டிருந்தன!
'இம்மென்ற ஓசையோடு திக்குகள் எட்டும் அமைதியோடு கூடி, மோன விரதத்தில் ஆழ்ந்திருந்த நேரம்:
அதோ ஒரு கல் தொலைவில், வாழ்க்கையின் வடிவத்தைச் சரியாகக் காணமுடியாதவர்கள் - மரண வேக்காட்டில் நொந்து