பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97

விளையாட்டு என்ற சொல்லைக் கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா? இந்தச் சொல்லில் பொழுதுபோக்கு என்ற பொருள் எங்காவது தொனிக்கிறதா? பொழுதுபோக்கு, பொருளற்றது, ஆழமில்லாதது என்ற பொருளிலேயே அந்தச் சொல்லை நாம் இப்போது பயன்படுத்தி வருகிறோம். ஆனால் மனிதகுல வரலாறு நமக்கு அப்படிச் சொல்லவில்லை. சமூகம் என்ற ஒன்று தான் உருவாக்கும் அல்லது தன் மீது கவியும் ஒரு கருத்தியலையே விளையாட்டுக்களின் வழியே வெளிப்படுத்துகின்றது.

தமிழ்நாட்டு விளையாட்டுக்களைப் பற்றிக் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். குற்றுயிரும் குலையுயிருமாக நம்மிடம் இன்னும் மிஞ்சியிருக்கும் கோலியாட்டம், பாண்டியாட்டம், ஆடு புலி ஆட்டம், பல்லாங்குழி ஆகியவற்றின் தோற்றம் பற்றியெல்லாம் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். எடுத்துக்காட்டாக இங்கு,‘பல்லாங்குழி’ ஆட்டத்தைப் பார்க்கலாம்.

பல்லாங்குழி ஆட்டம் பொதுவாகப் பெண்களால் ஆடப்படுவது. முதற் பூப்படைந்த பெண்ணின் தீட்டுக் குரிய காலத்திலும் கருவுற்ற பெண்கள் அமர்ந்து பொழுது போக்குவதற்கும் மட்டுமே இந்த விளையாட்டை இப்பொழுது ஆடிப்பார்க்கிறார்கள். நமது பண்பாட்டு மரபினில் பெண்ணுக்குரிய சீர்வரிசைப் பொருள்களில் பல்லாங்குழியும் இடம் பெறுகிறது. பல்லாங்குழி ஆட்டம் பற்றி அறிஞர் தேவநேயப் பாவாணர் 'தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்’ என்ற தம் நூலில் முதன்முதலாக எழுதினார். பின்னர் பேராசிரியர் தாயம்மாள் அறவாணன் ‘பல்லாங்குழி (திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு)’ என்ற விரிவான நூலை எழுதியுள்ளார். உலகெங்கிலும் பல்லாங்குழி ஆட்டம் சிற்சில மாறுதல்களுடன் பழங்குடிகளிடம் விளங்கி வருவதை இந்த நூல் காட்டுகின்றது.

பல்லாங்குழி ஆட்டத்தினுடைய வகைகளாக நான்கினைக் குறிப்பிடுகிறார் பாவாணர். தாயம்மாள் அறவாணன் பல்லாங்குழி ஆட்டத்தின் எட்டு வகைகளைக் குறிப்பிட்டு அவற்றின் வேற்றுப் பெயர்கள், குழிகளின் எண்ணிக்கை, ஒரு குழிக் காய்களின்