பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

இழைகளை இனங்காண முயல்வோம். இடையறாத நெடிய வரலாற்றையுடைய ஒரு சமூகத்தின் மீது மின்னல் வெட்டுகளாகப் பளீரென ஒளிபாய்ச்சுவதே நூலின் அமைதி. விரிவான ஆராய்ச்சி என்ற ஒளிவெள்ளத்திலே முழுக் காட்சியும் விளக்கம் பெறவேண்டும் என்ற பொருளும் இந்த உருவகத்திலிருந்து பெறப்படும்.

'தமிழ்' என்பது முதல் கட்டுரையாக அமைந்திருப்பது தற்செயலானதன்று. தமிழ்ப் பண்பாட்டின் உருவாக்கம் பற்றிய புரிதல் நூல் நெடுகவும் இழையோடுகின்றது. புறச்சமயங்களாகத் திரித்துக் காட்டப்படும் சமண, பௌத்த மதங்கள் தமிழ்ப் பண்பாட்டைச் சமைத்ததில் ஆற்றிய பங்கு அழுத்தமாகக் காட்டப்பட்டுள்ளது. சைவ,வைணவம் பற்றிப் பேசும் அதே வேளையில், சிறு தெய்வங்கள் பற்றியும், இப்பெருஞ் சமயங்கள் நாட்டார் சமயக் கூறுகளை எவ்வாறு கைவயப்படுத்திக்கொண்டன என்பதும் தெளிவுபடுத்தப்படுகின்றன. தொ. பரமசிவன் கட்டமைக்கும் தமிழ்ப் பண்பாட்டில் இசுலாமும் கிறித்தவமும் பிரிக்க முடியாத வகையிலேயே பிணைந்துள்ளன. சாதியைச் சமூகத்தின் முக்கிய அலகாக இனங்காணும் அதே வேளையில், சாதிக் கட்டுமானமும் கருத்தியலும், ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் அடிப்படை என்ற ஓர்மையும் ஐயத்திற்கிடமில்லாமல் வெளிப்படுகிறது. 'கீழோர்' மரபுகளைக் கணக்கிலெடுக்காமல் தமிழ்ப் பண்பாடு இல்லை என்பதும் மொத்தத்தில், உறுதிப்படுத்தப்படுகின்றது. அடிப்படைவாதங்களுக்கு எதிரான ஜனநாயகக் கூறுகளோடு தான் தொ.ப. முன்வைக்கும் தமிழ்ப் பண்பாடு விளங்குகின்றது. நுவலப்படுகின்ற பொருள்களின் சமகாலப் பொருத்தப்பாட்டையும் ஆங்காங்கே சுட்டிக்காட்ட, தொ.ப. தவறவில்லை.

பொருண்மைப் பண்பாடு (material culture) எனப்படும் துறையில் தமிழியல் ஆய்வாளர்களின் கவனம் போதுமான அளவு குவியவில்லை. மிக அடிப்படை நிலையில், தொல்லியலாளர் மட்டுமே அக்கறை கொள்வதாக அமைந்துவிட்ட இத்துறையில் உரல், உலக்கை, உணவு, உடை என்று முதற்படிகளை இந்நூல்