பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

தொட்டுப்பிடித்த பெண் (மகப்பேற்று நேரத்தில் உதவியவள்), மகப்பேற்றுக்கு உதவிய மருத்துவச்சி (நாவிதர் குடும்பத்துப் பெண்) ஆகிய மூவரும் சாப்பிடுகிறார்கள். சாமிகும்பிடும்போதும் அக்குழிக்கு முன் ஒரு நிமிட நேரம் குழந்தையைக் கிடத்தி எடுத்துக்கொள்கிறார்கள்.

இந்தச் சடங்கு முழுவதும் பெண்களாலேயே நடத்தப்படுகிறது. படைக்கப்பட்ட உணவினைப் பார்க்கக்கூட ஆண்களுக்கு அனுமதி இல்லை. சைவ வேளாளர் தொடங்கி பிராமணரல்லாத எல்லாச் சாதியினரிடையேயும் இச்சடங்கு நிகழ்வதைத் தென்மாவட்டங்களில் இக்கட்டுரையாளர் கண்டிருக்கிறார். சைவ வேளாளர் வீடுகளில் மட்டும் கருவாட்டுக் குழம்பிற்குப் பதிலாகக் காரக் குழம்பு என்னும் மிளகுக் குழம்பு ஊற்றப்படுகிறது.

சாமி கும்பிடும்போது, பெண்களின் வேண்டுகோள் எதிர்காலத் தன்மையுடன் இருந்தாலும் அந்தச் சடங்கு யோனித் தெய்வத்திற்கு நன்றி தெரிவிக்கும் சடங்காகவே நடைபெறுவதைக் காணலாம். பிறந்த குழந்தை இறந்துவிட்டால் இச்சடங்கு நடைபெறுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. துடுப்புக்குழி என்பது சடங்கு நடைபெறும் நாள்வரை யோனித் தெய்வம் உறையும் இடமாகக் கருதப்படுகிறது. ஊன்றப்பட்ட குச்சி ஆண்உறுப்பைக் குறியீடாகக் காட்டி நிற்கின்றது. கருவாட்டுக் குழம்பும் மகப்பேற்று மருந்தும் மருத்துவத் தன்மையுடையனவாகவும் மந்திரத் தன்மையுடையனவாகவும் கருதப்படுகின்றன.

கும்பகோணத்திற்கு அடுத்த தாராசுரத்தில் நெடுஞ்சாலை ஓரமாக அமைந்துள்ள சக்கராயி கோயில் யோனித் தெய்வத்தின் கோயிலாகும். முகத்திற்குப் பதிலாகத் தாமரை மலரோடு, ஆடையின்றிப் பிறப்புறுப்பினை வெளிக்காட்டி, குத்துக்கால் இட்டபடி இத்தெய்வத்தின் சிலை அமைந்துள்ளது. இன்றுவரை அப்பகுதியில் வாழும் மக்கள் மகப்பேற்றுத் தீட்டுக்காலம் கழிந்தவுடன் பிறந்த மகவை இக்கோயிலுக்கு எடுத்து வருகின்றனர்.