பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123

கல்வெட்டுக்கள் சில சமண மதத்துப் பெண் துறவிகள் அங்கங்கே இருந்ததனைக் காட்டுகின்றன. இவர்கள் சிறிய அளவில் சமண மதக் கல்விப் பணி செய்து வந்ததாகத் தெரிகிறது. சைவ மடங்களுக்கும் கிறித்தவ மடங்களுக்கும் தங்கள் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்கள் இன்றளவும் அதனை முழுமையான ஈடுபாட்டோடும் மன மகிழ்ச்சியோடும் செய்வதில்லை என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.

அஞ்சுவண்ணம்

‘அஞ்சுவண்ணம்’ என்ற சொல் முதன்முதலில் தமிழ்க் கல்வெட்டுக்களில்தான் காணப்படுகிறது. இந்தச் சொல் ‘நானாதேசிகள்', 'மணிக்கிராமத்தார்’, ‘திசை ஆயிரத்து ஐநூற்றுவர்' ஆகிய சொற்களோடு கலந்துதான் வழங்குகின்றது. எனவே, நானாதேசிகள், மணிக்கிராமத்தார் என்பது போல கி.பி.13ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டிலிருந்த ‘வணிகக்குழு' (merchant guide) ஒன்றின் பெயர் இது என அறிஞர் முடிவு கட்டினர்.

கல்வெட்டறிஞர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார் ‘பல்சந்த மாலை' என்ற அறியப்படாத நூல் ஒன்றில் இப்பெயர் வருவதைக் கண்டுபிடித்தார். நாகப்பட்டினத்தைப் புகழும் தனிப்பாடல் ஒன்றில் ‘அஞ்சுவண்ணமும் தழைத்து அறம் தழைத்த வானவூர்’ என வருவதையும் அவர் எடுத்துக்காட்டி, துறைமுக நகரான நாகப்பட்டினத்தில் அஞ்சுவண்ணத்தவர் இருந்த செய்தியை உறுதிப்படுத்தினார். அதன் பின்னர் ‘பல்சந்த மாலை' என்ற பெயரில் கிடைத்த சில பாடல்களை விரித்து எழுதியவர் தமிழ் இலக்கிய வரலாற்றறிஞரான மு. அருணாசலம்.

யவனராசன் கலுபதி தாமுதல் எண்ண வந்தோர்
அயல்மிகு தானையர் அஞ்சு வண்ணத்தவர்

என்பது பல்சந்த மாலைப் பாடல் பகுதி. இசுலாமியரின் சமய, அரசியல், ஆட்சித் தலைவராக விளங்கிய கலிபாக்களைக் (caliph) குறிக்கும் சொல்லே 'யவன ராசன் கலுபதி' எனக் கண்டறிந்தனர்.