பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147

என்ற ஔவையாரின் புறப்பாடலில் சிவப்பு என்ற சொல் வெகுளி என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. ஆயினும் இந்தச் சொற்கள் தோலின் நிறம் பற்றிப் பேச வரவில்லை.

சங்க இலக்கியங்களிலும் அதற்குப்பின் வந்த நீதி இலக்கியங்களிலும் சிலம்பு, மேகலை போன்ற காப்பியங்களிலும் ஆண், பெண் இருவரின் உடல் சார்ந்த வருணனைகள் ஏராளமாக இடம் பெறுகின்றன. ஆனால் அவையனைத்தும் மனித உறுப்புகளின் அளவும் வடிவும் சார்ந்தாகவே அமைந்துள்ளன. இந்த வருணனைகளும் அளவு மட்டுமன்றி உறுப்புக்களின் பயன் கருதியதாகவும் அமைந்துள்ளன. பெருத்த முலை என்பது வளமை அல்லது தாய்மையின் குறியீடாகவும் வீரரின் பெருத்த தோள் என்பது வலிமையின் சின்னமாகவும், பாதுகாப்பின் சின்னமாகவும் அமைந்துள்ளன. உயர்வு, தாழ்வு என்ற கருத் தோட்டங்கள் இந்த வருணனைகளில் காணப்படவில்லை. மாறாக, அழகு என்பது உடல் நலம் சார்ந்ததாகவே பேசப்பட்டிருக்கிறது. இவ்வருணனைகளில் ஓரிடம் தவிர ஏனைய இடங்களில் மனிதத் தோலின் நிறம் பேசப்படவே இல்லை. 'காதலன் அல்லது கணவனைப் பிரிந்த பெண்ணின் உடலில் பொன் நிறத்தில் பசலை பூக்கும், என்னும் ஓரிடத்தில் மட்டுமே மனிதத் தோலின் நிறம் பேசப்படுகிறது.

இவை ஒருபுறமாக, மற்றொரு புறத்தில் தெய்வங்களைப் பேசும் இடத்தில் அவற்றின் நிறங்கள் பேசப்படுகின்றன. மாயோன் மலை போன்று நீலநிறத்தில் இருக்கிறான்; பலராமன் (வாலியோன்) அருவிபோல வெள்ளை நிறத்தில் இருக்கிறான் என்று ஒரு சங்கப் பாடல் கூறும். திருமாலுக்கும் பலராமனுக்கும் நிறம் சொல்லப்பட்டாலும், முருகன், கொற்றவை போன்ற தெய்வங்களுக்கு நிறம் சொல்லப் படவில்லை. சிவபெருமானின் கழுத்து நஞ்சுண்ட காரணத்தால் கருமையும் நீலமும் கலந்த வண்ணத்தில் அமைந்திருப்பதாக மற்றொரு பாட்டு கூறும்.

பக்தி இலக்கியக் காலந்தொட்டுத் தெய்வங்களுக்கும், மனிதர்களுக்கும் பல்வேறு நிறங்கள் பேசப்படுகின்றன. கடவுள்