பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

இரவில், 'உப்பு' என்ற சொல்லைச் சொல்லக் கூடாது. இரவிலே அடுத்த வீட்டாருக்கு மோர் கொடுத்தல் கூடாது. தவிர்க்க முடியாத நேரத்தில் சிறிது வெள்ளை உப்பினை அதற்கு மாற்றாக வாங்கிக்கொண்டு கொடுக்கலாம். புதுமனைக்கு உள்ளே மணமகள் முதலில் கொண்டுசெல்ல வேண்டிய பொருள் உப்புதான். இவை உப்பு குறித்த சில நம்பிக்கைகள். உப்பு, உறவுக்கும் செழிப்புக்கும் அடையாளமாகக் கருதப்பட்டது. எனவே சில சாதியார் இறந்தார்க்குப் படைக்கும் உணவில் உப்புச் சேர்ப்பதில்லை.

விருந்தாளிகளுக்குப் படைக்கும் உணவில் பாகற்காய், பயறு வகைகள், அகத்திக்கீரை ஆகியவற்றைச் சேர்ப்பதில்லை. இறப்பு நிகழ்ந்த வீடுகளில் அன்றும், மறுநாளும் உணவில் அகத்திக்கீரை சேர்ப்பர். அகத்திக்கீரையும் பயறு வகைகளும் இறப்போடும் இறந்தவர் உணவோடும் தொடர்புபடுத்தப்படுகின்றன. எனவே அவற்றை விருந்தாளிகளுக்குப் படைப்பதில்லை. தென் மாவட்டங்களில் ‘பயறு அவித்தல்' என்பது இறப்பைக் குறிக்கும். விழாக்காலங்களிலும் உணவில் பயறு வகைகள் (கடலை, தட்டை) பெரும்பாலும் தவிர்க்கப்படுகின்றன.

தொன்மையான பயிர் வகைகளில் ஒன்றான சுரையின் காயினைப் புலால் போன்றது எனக் கருதித் தமிழ்நாட்டு பிராமணர் முற்றிலுமாக விலக்கி விடுகின்றனர். புலால், மீன் ஆகியவற்றோடு சேர்க்கப்படும் காய்கறி இது. ஆதலால் இதனை விலக்குகின்றனர் போலும்.

போக்குவரத்து வசதி பெருகாத காலங்களில் பயணத்தின் போது இரண்டு அல்லது மூன்று பொழுதுக்குக் கட்டுச்சோறு கட்டிக் கொண்டுசெல்லும் வழக்கம் இருந்தது. காட்டுவழியில் உள்ள தெய்வங்களும் ஆவிகளும் கட்டுச்சோற்று உணவைத் தீண்டாமல் பாதுகாக்க, சோற்றின்மீது ஒரு அடுப்புக் கரித் துண்டினை உடன்வைத்துக் கட்டுவர்.

பெரும்பாலான சாதியார் விருந்தாளிகளுக்கு உணவு பரிமாறும்போது முதலில் உப்பினை வைப்பர். ஒன்றிரண்டு சாதிகளில் முதலில் சோற்றினை வைக்கும் வழக்கமுண்டு.