பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

தேய்க்கும் வழக்கம் அக்காலம் தொட்டு வழக்கில் இருந்ததை அறிகிறோம். பனையும் எள்ளும் தமிழகத்தின் தொன்மையான புன்செய்க் காட்டுப் பயிர்கள். இவையிரண்டும் ஒரே நிலத்தில் பயிராவன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆமணக்கு வித்தினைச் செக்கிலிட்டு ஆட்டிப் பெறப்பட்ட விளக்கெண்ணையும், வேப்பெண்ணெயும் தலையில் தேய்த்துக் கொள்ளவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டன. புன்னை எண்ணெயும், விளக்கெண்ணெயும் விளக்கு எரிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

கி.பி. 15ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே ‘மணிலா' எனப்படும் நிலக்கடலை பயிரிடப்பட்டு, எண்ணெய் வித்தாகப் பயன்படுத்தப் பெற்றிருக்கிறது.

பக்தி இயக்கம் தோன்றிய காலத்தில் பார்ப்பனர் வீடுகளிலும் கோயில்களிலும் பாலிலிருந்து பெறப்பட்ட நெய் மட்டுமே சமையலுக்குப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றது. சங்க இலக்கியத்தில்கூடப் பார்ப்பனர் வீடுகளில் மாதுளங்காயினை நெய்யிலே பொரித்த செய்தி கூறப்பட்டுள்ளது; பக்தி இயக்கக் காலத்தில் சாதியப் படிநிலைகள் கடுமையாக வகுக்கப்பட்ட போது, செக்கினைத் தொழிற் கருவியாகக் கொண்டு எண்ணெய் எடுக்கும் சாதியார் கீழ்ச்சாதியாகக் கருதப்பட்டனர். 13ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுக்கள் இவர்களைச் சக்கரப்பாடியார், சங்கரப்பாடியார் என்று குறிக்கின்றன. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் எழுந்த தாராசுரம் கோயிற் சிற்ப வரிசையில் கலியநாயனார் செக்காட்டும் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளது.

இடைக்காலத்தில் எண்ணெய் அமங்கலப் பொருளாகக் கருதப்பட்டது. எண்ணெய் விற்போர் எதிரில் வருவது நல்ல சகுனம் இல்லை எனவும் கருதப்பட்டது. இக்காலத்தில் எண்ணெய் விற்கும் சாதியார், ‘செட்டியார்’ என்ற சாதிப் பெயரை இட்டுக்கொள்கின்றனர். அக்காலத்தில் அவர்களுக்குச் 'செக்கார்' என்றும் பெயருண்டு.