பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

‘இரவலர்’ என்பது சங்க இலக்கியத்தில் ஏழையரான கலைஞர்களைக் குறிக்கவே வந்துள்ளது. ஏன் என்றால், எதுவும் இன்றிப் பிச்சையெடுத்தல் என்ற வழக்கம் தமிழ்நாட்டில் இருந்ததாகத் தெரியவில்லை. சமண மதத்தின் துறவிகள் மூலமாகவே இவ்வழக்கம் பரவியிருக்க வேண்டும். சமண மதக் கருத்துக்களை அறிந்த திருவள்ளுவர்தான் 'பிட்சை' என்ற வடசொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லாக 'இரத்தல்' என்பதைப் பயன்படுத்துகிறார். முற்றும் துறந்த துறவிகள் பசித்தபோது பிச்சையெடுப்பதைச் சமண மதம் அனுமதித்தது. இல்லறத்தார் அவர்களுக்குப் பிச்சையிடுவதைப் பெரும் பேறாகக் கருதவும் வைத்தது. பௌத்த மதத் துறவிகளும் பிச்சை ஏற்று வாழ்ந்தனர். கௌதம புத்தரும் பிச்சை ஏற்று உண்டிருக்கிறார்.

வறுமை காரணமாகப் பிச்சையேற்று உண்ணும் நிலைக்கு வந்த யாரும் அதைத் தாம் பிறந்து வளர்ந்த ஊரில் செய்வதில்லை. மரபுவழி வந்த 'மானம்' என்னும் சமூக மதிப்பீடே இதற்குக் காரணமாகும். ஒவ்வொரு ஊரிலும் முகமறியாத தூரத்து ஊரில் இருந்து வந்தவர்களே பிச்சையெடுப்பது வழக்கம். இவர்களைக் குறிக்கவே ‘பரதேசி’ (பிறதேசம் அல்லது பகுதியைச் சேர்ந்தவர்) என்ற சொல் உருவாகியது.

முதன்முதலாகப் பிச்சையெடுப்பதை நிறுவன ரீதியாகச் சமண மதமே அங்கீகரித்தது. அம்மதமே நால்வகைத் தானங்களில் ஒன்றாக அன்னதானத்தையும் ஆக்கியது. ஆடையில்லாத சமணத் துறவிகள் பிச்சைகேட்டு வரும்போது பெண்கள் கதவை அடைத்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடியுள்ளனர். 'காவிசேர்கண் மடவார் கண்டோடிக் கதவடைக்கும் கள்வ னானேன்' என்று திருநாவுக்கரசர் தாம் திகம்பர சமணராகப் பிச்சையெடுத்த வரலாற்றைப் பாடுகிறார்.

சமண மதத்தைச் சாய்த்தெழுந்த சைவ மதமும் 'பிச்சை' என்ற கோட்பாட்டைப் பின்னர் ஓரளவு ஏற்றுக்கொண்டது. சிவபெருமான் ஆடையின்றி, தாருகாவனத்தில் பிச்சையெடுக்கச் சென்றதாகக்