பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

கதைகள் புனையப்பட்டன. தமிழ் நாட்டு வைணவமும் பிற்காலத்தில் துறவிகள் பிச்சையெடுத்து உண்பதை அனுமதித்தது. நிர்வாணத்தை அங்கீகரிக்கவில்லை.) இராமாநுசர் போன்ற வைணவப் பெருந்துறவிகள் பிச்சையேற்று நின்றிருக்கின்றனர். சமண, பௌத்த மதத்துறவிகள் வெந்த உணவை பிச்சையேற்றிருக்கின்றனர். பிச்சையேற்பது ஆணாக இருந்தாலும் பிச்சையிடும் பணி பெண்களுக்கு உரியதாகவே அமைந்திருந்தது. மணிமேகலை காட்டும் ‘அமுதசுரபி' எனும் பாத்திரத்தில் ஆதிரை என்னும் பெண்ணே முதலில் சோற்றுப் பிச்சை இடுகிறாள். பெண்ணின் கையினால் பிச்சை பெறுவதால் பிச்சைக்கு ‘மாதுகரம்’ என்ற வடமொழிப் பெயரையும் இட்டு அழைத்தனர். ‘உடையவர் மாதுகரத்துக்கு எழுந்தருளினார்' என்பது வைணவ வழக்கு.

பழங்குடி மக்களிடத்தில் பிச்சை எடுக்கும் வழக்கம் இல்லை. சமத்துவமற்ற, நாகரிகமடைந்த (?) சமூகங்களில் மட்டுமே பிச்சை எடுக்கும் வழக்கம் தோன்றியிருக்கிறது. எல்லா வகையான உற்பத்தி உறவுகளிலிருந்தும் விலகிநின்ற துறவிகளுக்கு அது தேவையாக இருந்ததனால் சமயங்களின் வளர்ச்சியோடு பிச்சை எடுக்கும் வழக்கத்துக்குச் சமய அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் ‘பிச்சை’ புகுந்த கதை இதுதான்!

தெங்கும் தேங்காயும்

தமிழ் நாட்டில் இன்று பரவலாகக் காணப்படும் மரங்களில் ஒன்று தெங்கு. கடற்கரைப் பகுதி தொடங்கி மலையடி வாரம்வரை தென்னந்தோப்புகள் பரவலாகக் காணப்படுகின்றன. மிக நீண்ட காலம் வாழும் பயிரினங்களில் இதுவும் ஒன்று. தென்னை மரத்தின் வயதைக் கணக்கிட அதன் உயரமும் கணுக்களும் அளவாகக் கொள்ளப்படுகின்றன.

தமிழர்களின் அன்றாட உணவிலும் தேங்காய் இடம் பெறுகிறது. கோயில் வழிபாடுகளில் அர்ச்சனைக்குரிய பொருள்களில் இது தவறாமல் இடம்பெறுகிறது. இஃதன்றிப் பிள்ளையார் கோயில்களிலும் சிறுதெய்வக் கோயில்களிலும் தேங்காயை