பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

ஆட்டின் வயிற்றைக் குத்திக் கிழித்து அதன் உள்ளே இருக்கும் குட்டியை எடுத்துப் பலி பீடத்தின்மீது வைக்கின்றனர். குத்திக் கிழிப்பதனால் பெண்ணாடும் இறந்துவிடும்; குட்டியும் இறந்துவிடும். இவ்வாறு பலியிடுவதைச் ‘சூலாடு குத்துதல்' என்பர். குற்றுயிராகப் பலிபீடத்தின் மீது இளங்குட்டியை வைத்தலை 'துவளக்குட்டி கொடுத்தல்’ என்பர் (துவளும் குட்டி' என்பதே துவளக் குட்டியாயிருத்தல் வேண்டும்.) சூலாடு குத்துவதற்கு பெண்களையும் குழந்தைகளையும் அவ்விடத்தில் அப்புறப்படுத்திவிடுவர்.


பன்றியைப் பலிகொடுக்கும்போது,சில இடங்களில் தலையை வெட்டாமல் பன்றியை மல்லாக்கக் கிடத்தி அதன் மார்பைப் பிளந்து இதயத்தை எடுத்துப் பலிபீடத்தின்மீது வைக்கும் வழக்கம் உள்ளது. சில இடங்களில் சாமியாடிகள் பலியிடப் பெறும் விலங்குகளின் இரத்தத்தைக் குடிப்பதுண்டு. அவ்வாறு இரத்தம் குடிக்காத கோயில்களில் தெய்வத்தின் முன் படைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருள்களின்மீது அந்த இரத்தம் தெளிக்கப்படும்.

சினம்மிகுந்த ஆண்தெய்வக் கோயில்களில் கோயிலுக்குச் சற்றுத் தள்ளி இருட்டில் சென்று சாமியாடுபவர் சோற்றுத் திரளைகளை ஆகாயத்தில் எறிகிறார். அவ்வாறு வீசி எறிய சாமியாடி கைகளை