பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

‘சுதந்திரச்சங்கு' என்ற இதழின் பெயரும், 'சங்கு நூலகம்', 'சங்கு சுப்பிரமணியன்' என்ற பெயர்களும் இருபதாம் நூற்றாண்டுத் தமிழர்கள் நன்கு அறிந்தவை.

நெல்லை மாவட்டத்தில் பழைய அம்மன் கோயில்களில் வெளிப்பகுதியில் கிழக்கு ஓரமாகச் சங்குச்சாமியின் சிலைகள் இன்றும் காணப்படுகின்றன. மார்பு அளவே உள்ள இந்தச் சிலைகள் நீண்ட சடை முடியோடு ஒற்றைச் சங்கினை வாயில் வைத்து இரண்டு கையாலும் பிடித்து ஊதும் மானிடத் தோற்றத்தில் காணப்படுகின்றன. இச்சிலைகளுக்கு என்று தனிப்பூசனைகள் இல்லை. ஆனால் சங்கு ஊதும் தோற்றத்துடன் இருப்பதால் ‘சங்குச்சாமி' என்ற பெயர் மட்டும் இவற்றுக்கு உண்டு. திருமாலின் கையில் உள்ள சங்கு பிறப்பதற்கு முன்னரே சங்குச்சாமிகள் பிறந்திருக்கலாம் என்ற ஊகம் ஆய்வுக்கு உரியது. அத்துடன் விஷ்ணு வழிபாடு சிறப்பிடம் பெற்ற வட இந்தியப் பகுதிகளில் சங்கு விளையும் கடற்கரைப் பகுதிகள் இல்லை என்பதும் கூர்ந்து கவனிக்கத்தக்கது. தமிழர்களின் பண்பாட்டில் சங்கு பெறும் இடத்தினை நோக்கித்தான் பாரதிதாசன் பின்வருமாறு பாடினார். "எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு."


3. தைப்பூசம்

தமிழர்களின் தனிப்பெரும் திருவிழாவாகத் திகழ்வது தைப்பொங்கல் திருநாள். தேசிய இனத்துக்குரிய அடையாளம் ஒன்றைத் தமிழர்க்கு வழங்கும் திருவிழா இது. சமய எல்லைகளைக் கடந்த திருவிழாவாகவும் இது அமைகிறது.

பிறப்பு, இறப்புத் தீட்டுக்களால் பாதிக்கப்படாத திருவிழா இது என்பது பலர் அறியாத செய்தி. தைப் பொங்கல் நாளன்று ஒரு வீட்டில் இறப்பு நிகழ்ந்தாலும் மிகவிரைவாக வீட்டைச் சுத்தம் செய்து