பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

பொங்கலையும்,பூக்களாலான எருத்தட்டுக்களையும் நீர்நிலைகளுக்குப் பெண் பிள்ளைகள் எடுத்துச்சென்று நீரில் விடுவர். எருத்தட்டின் மீது வெற்றிலையில் சூடமேற்றி நீரில் விடுவதும் உண்டு.

ஆண்டாளின் திருப்பாவை காட்டும் மார்கழி நீராடலை நாம் அறிவோம். ஆனால் சங்க இலக்கியங்களில் தைந்நீராடல் குறிக்கப்படுகிறது. “தாயருகே நின்று தவத் தைந்நீராடுதல் நீயறிதி வையை நதி” என்பது பரிபாடல். தைந்நீராடல் பற்றி அறிஞர் மு. இராகவையங்கார் ஒரு நெடுங்கட்டுரை எழுதியுள்ளார். ஆனால் அவர் மார்கழி மாதம் வாசலில் பூ வைக்கும் சடங்கையும் பொங்கலையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

ஆண்டாளின் முப்பது நாள் திருப்பாவை நோன்பு மார்கழித் திங்கள் முதலாம் நாள் தொடங்கவில்லை. மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளிலேயே தொடங்குகிறது. எனவே அது தைத்திங்கள் மதி நிறைந்த நன்னாளில் (தைப்பூசத்தில்) நிறைவு பெற்றிருக்க வேண்டும். அந்நாளில் ‘பாற்சோறு மூட நெய்பெய்து' (பாற் பொங்கலிட்டு) உண்டு சுவைத்திருக்க வேண்டும். மார்கழி நீராட்டுப் போலவே தைந்நீராட்டும் பெண் பிள்ளைகளுக்கு உரியதாகவே சொல்லப் பெறுகிறது. எனவே மார்கழி நிறைமதி நாள் தொடங்கித் தை மாத நிறைமதி நாள் வரை பெண் பிள்ளைகள் நோன்பிருந்து 'சிறுவீடு' கட்டிப் பொங்கலிட்டுக் கொண்டாடிய ஒரு பழைய வழக்கத்தையே தமிழ் வைணவம் தனதாக்கிக் கொண்டு மார்கழி நீராட்டாக மாற்றியிருக்கிறது எனலாம்.

தைமாதம் காமனை (காதற்கடவுள்) நோக்கிச் செய்யப் பெற்ற மற்றொரு நோன்பினையும் ஆண்டாள் திருமொழி குறிக்கிறது. அது 'மாசி முன்னாளில்' கொண்டாடப்பெற்ற வேறொரு திருவிழாவாகும். சங்க நூல்களில் அதற்குச் சான்றுகள் இல்லை.

திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், மாசிக்களரி போன்றவை பக்தி இயக்கத்துக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த திருவிழாக்கள் ஆகும். அவற்றைச் சைவ வைணவப் பெருஞ்சமயங்கள் தம்வயமாக்கிக்