பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

நூற்றாண்டு என அறிஞர்கள் கணித்துள்ளனர். இப்பொழுது கற்பக விநாயகர் என வழங்கும் இவ்விநாயகரின் பழைய பெயர் 'தேசி விநாயகர்' என்பதாகும். தமிழ்நாட்டில் பிள்ளையாருக்கு வழங்கும் பல பெயர்களில் குறிப்பிடத்தகுந்தவை தேசி விநாயகர், தேசிக விநாயகர், தாவள விநாயகர் என்பன. தேசி, தேசிகர் என்ற தமிழ்ச் சொற்கள் வியாபாரிகளைக் குறிப்பனவாம். தேசங்கள் பலவற்றிற்கும் செல்வதால் வியாபாரிகள் 'தேசிகள்' எனப்பட்டனர் போலும். 'நானா தேசிகள்' என்பது தென்னிந்தியாவில் இருந்த மிகப்பெரிய வணிகக்குழுவின் பெயர். பிள்ளையார்பட்டித் திருக்கோயில் இன்றளவும் பழைமை வாய்ந்த வணிகச் சாதியான ‘நகரத்தார்’ எனப்படும் நாட்டுக் கோட்டைச் செட்டியாருக்கே உரியது. செட்டி நாட்டு ஊர்களில் ஒன்றான பொன்னமராவதிக்கு அருகில் உள்ள சுந்தரம் என்னும் ஊரை அவ்வூர்க் கல்வெட்டு 'தென் கோனாட்டு ஒல்லையூர்க் கூற்றத்து சுந்தரசோழபுரமான தேசியுகந்த பட்டணம்' என்றே குறிக்கிறது. மற்றும் சில கல்வெட்டுக்கள் இவ்வூரை ஒரு ‘நகரம்', என்றே குறிக்கின்றன. அக்காலத்தில் நகரம் என்ற சொல் வணிகர்களின் குடியிருப்பைச் சுட்டும். எனவே நகரத்தாரால் வழிபடப்பட்ட நானாதேசி விநாயகர், தேசி விநாயகர் எனப்பட்டார். 'தேசி' என்னும் சொல் பிற்காலத்தில் வணிகர்களைக் குறிக்க, தேசிகர் என வழங்கப்பட்டது. முகமதுநபி வியாபாரம் செய்துவந்தார் என்பதைக் குறிக்கும் உமறுப்புலவர் சீறாப்புராணத்தில் அவரைத் ‘தேசிகர்' என்று குறிப்பிடுகிறார். தேசிகர் என்னும் சொல் 13ஆம் நூற்றாண்டுக்குப்பின் சைவ, வைணவ சமயங்களில் சுப்பிரமணிய தேசிகர், வேதாந்த தேசிகர் எனச் சமயக் குருமார்களை (ஆசார்யர்களை)க் குறிப்பதாகவும் வழங்கியது. தேசிக விநாயகம் என்பது கவிமணியின் இயற்பெயர்.

தாவளம் என்பது பெருவழிகளில் இருந்த வாணிகச் சத்திரங்களைக் குறிக்கும். "தாவளத்திலிருந்து தன்மம் வளர்த்த செட்டியும் செட்டி வீரப்புத்திரர்களும்” என்று பிரான்மலைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.