பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

வாணிகச் சாதியினர் தெய்வமாகவே தமிழ்நாட்டுக்குப் பிள்ளையார் வழிபாடு வந்தது என்று கொள்வதே பொருத்தமாகத் தோன்றுகிறது.

துலுக்க நாச்சியார்

தமிழ்நாட்டிற்கு இசுலாம் ‘வாளோடு வந்த மதம்' என்று சிலர் குறிப்பிடுகின்றனர். பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இசுலாமியர்கள் வாளோடு நுழைந்தது வரலாற்று உண்மைதான். ஆனால் இசுலாம் அதற்கு முன்பே வணிகர்கள் வழியாக வந்திருக்க வேண்டும். பிற்காலச் சோழர் ஆட்சியின் போதே ‘அஞ்சுவண்ணம்' என்ற வணிகக்குழு இருந்திருக்கிறது. முதலாம் இராசராசன் கல்வெட்டில், 'சோனகன் சாவூர் பரஞ்சோதி’ என்பவன் குறிக்கப்பெறுகின்றான். ‘சோனகச் சிடுக்கின் கூடு' என்று காதில் அணியும் நகை ஒன்றும் அவனது கல்வெட்டில் குறிக்கப்படுகின்றது. 'சோனகர்' என்பது அரபியரைக் குறிக்கும்.

அரபியர்களும் தமிழர்களைப் போலவே ஒரு பழைய நாகரிகத்தின் வழிவந்தவராவர். எனவே இசுலாமிய சமயத்திற்குத் தமிழ்நாட்டிற்குக் கொடுப்பதற்கும் கொள்வதற்கும் சில உண்மைகளும் நெறிகளும் இருந்தன. ‘யுனானி' என்னும் மருத்துவமுறையும், அல்வா, பிரியாணி போன்ற உணவு வகைகளும் இசுலாமியர்வழித் தமிழகத்திற்கு வந்தவையாகும். படைப் போர், கிஸ்ஸா (கதை), முனாஜாத் (வாழ்க்கைச் சரிதம்), நாமா (போற்றிப் பாடல்) முதலிய இலக்கிய வகைமைகளும் தமிழுக்கு இசுலாத்தின் பங்களிப்பே.