பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

மருத்துவப் பறையரும் இருந்தனர். பிற்காலச் சோழப் பேரரசில் பறையர்கள் சிலர் உயர்ந்த பதவிகளில் இருந்தது, கல்வெட்டுக்களால் அறியப்படும் செய்தி. மான் தோல் தவிர்ந்த ஏனைய தோல்கள் தீட்டுக்குக் காரணமாகும் என்பது பார்ப்பனரின் வருணக்கோட்பாட்டில் உள்ள வழக்கமாகும்.

வருணக் கோட்பாடு காரணமாகத் தோலைப்பதப்படுத்தும் பறையர், ‘இழிந்த' சாதியினர் ஆக்கப்பட்டனர். ஆனால் பறையர்கள் சில சாதியினருக்குச் சமய குருவாக இருந்து பல சடங்குகளையும் நடத்தியுள்ளனர். எனவே சில பழங் கோயில்களில் அவர்களுக்குத் தனித்த மரியாதையும் அளிக்கப்பட்டிருந்தது. 'பார்ப்பானுக்கு மூப்பு பறையன், கேட்பார் இல்லாமல் கீழ்ச் சாதியானான்' என்னும் சொல்லடை இன்றும் தென் தமிழ்நாட்டில் வழங்கி வருகிறது.

திருவாரூர்க் கோயில் திருவிழாவின்போது, பறையர் ஒருவர் யானைமீது அமர்ந்து கொடிபிடித்துச் செல்லும் வழக்கம் அண்மைக் காலம்வரை நடைமுறையில் இருந்திருக்கிறது. பார்ப்பாரையும் பறையரையும் தொடர்புபடுத்தும் கதையும் நடைமுறையும் இக்கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வழக்கில் இருந்துள்ளது.

ஒருநாள் திருவாரூர்க் கோயிலுக்குள் பார்ப்பனர்கள் யாகம் செய்துகொண்டிருந்தனர். அந்த வேள்வியின் பயனாகச் சிவபெருமான் ஒரு பறை மகன் வேடத்தில் செத்த கன்றுக் குட்டியைத் தோளில் போட்டுக்கொண்டு வேள்விக் கூடத்திற்குள் வந்துவிட்டார். வந்தவர் சிவபெருமான் என்பதை உணராத பார்ப்பனர், "பறையன் உள்ளே வந்துவிட்டான்; யாகம் தீட்டுப்பட்டுவிட்டது" என்று கத்திக்கொண்டே வெளியே ஓடிவிட்டனர். சினங்கொண்ட சிவபெருமான், “நீங்களும் பறையன் ஆகுங்கள்” என்று சாபம் கொடுத்துவிட்டார். சாபத்திலிருந்து விமோசனம் தருமாறு பார்ப்பனர்கள் கெஞ்சினர். மனம் இரங்கிய சிவபெருமான், நிரந்தரமாகப் பறையனாவதற்குப் பதில் 'நாள்தோறும் நண்பகல் முதல் ஒரு நாழிகை நேரம் மட்டும் பறையனாய்