பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6

வில் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் தமிழில் வெளிவரும் முதல் கலைச் சொற் களஞ்சிய அகராதி நூல் இதுவே யாகும்.

இந்நூலின் மற்றொரு சிறப்பு ஏராளமான படங்களோடு வெளிவருவதாகும். அறிவியல் நுணுக்கச் செய்திகளை பட விளக்கமின்றிக் கூறுவது ஏற்புடையதன்று என்பது எனது கருத்து. அறிவியல் செய்திகளைப் படங்களுடன் தரும்போதே வாசகர்கள் அச்செய்திகளை மிகத் தெளிவாகவும் விரைந்தும் படித்துணர முடியும். அறிவியல் முதலாக நோயியல் ஈறாக 68 அறிவியல் பிரிவுகட்கான செய்திகளையும் படங்களையும் உள்ளடக்கியது இந்நூல்.

இதற்கு முன் 52 அறிவியல் பிரிவுகட்கான சொற்பொருள் விளக்க நூலாக இரு தொகுதிகளை உருவாக்கி வெளியிட்டபட்டறிவின் அடிப்படையில் இந்நூலை ஆங்கில நூல்களுக்கு இணையாக கண்கவர் வடிவில் அச்சிட்டு வெளியிட்டுள்ளேன்.

அறிவியல் தமிழ் வளர்ச்சியில் நாட்டமுள்ள தமிழ் ஆர்வலர்கள், படைப்பாளர்கள். ஆசிரியர்கள், மாணவர்கள், வாச கர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினர்கட்கும் அறிவு விருந்தாக இந்நூல் அமையவேண்டும் என்பது என் வேணவா. தொழில் நுட்பக் கல்வி பெறும் மாணவர்கட்கும் படிப்பை பாதியில் நிறுத்திய படிப்பார்வமிக்கவர்கட்கும் அறிவியல் அறிவை அள்ளித்தரும் அட்சய பாத்திரமாக இந்நூல் விளங்க முடியும் என்பது என் நம்பிக்கை.

அறிவியல், தொழில்நுட்ப, மருத்துவத்துறைகள் தொடர்பான தமிழ் நூல் எழுத விரும்புவோர் கலைச்சொல் சிக்கலின்றி நூல் எழுத இந்நூல் பெருந்துணையாயமையும் என்பது திண்ணம்.

இந்நூலை உருவாக்குவதில் எனக்குப் பெருந்துணையாயமைந்தவர் என் கெழுதகை நண்பர் திரு. இரா.நடராசன், எம்.ஏ;பி.ஏ.எல். அவர்களாவார். கல்லூரிக் கல்வியின்போது என் வகுப்புத் தோழராயமைந்த நண்பர் அன்று முதல் இன்று வரை என் அறிவியல் தமிழ் வளர்ச்சி முயற்சிகளுக்குத் தோள் கொடுத்து உறுதுணையாயமைந்து வருபவர். இந்நூல் தொடர்பில் அவர் பங்கு கணிசமானது. அறிவியல் தமிழ் வளர்ச்சியில் உள்ளார்ந்த ஆர்வமும் உழைப்பும் நாட்டமுமுள்ள அவர்களின் உதவியையும் ஒத்துழைப்பையும் மிகுந்த நன்றிப் பெருக்குடன் இச்சமயத்தில் நினைவுகூர்கிறேன். இந்நூலுள் இடம் பெற்றுள்ள வரைபடங்களை வரைந்த இளம் ஓவியக் கலைஞர் திரு.இராஜாரம் அவர்கட்கும் அழகிய முறையில் அச்சிட்டுத் தந்த திருமதி.சித்தை செளதா அவர்கட்டும் மீரா அச்சக ஊழியர்கட்டும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். தமிழுலகம் இந்நூலையும் ஏற்று என் முயற்சிகளுக்குப் பேராதரவு அளிக்கும் என நம்புகிறேன்.

20–12–1994 சென்னை-40 மணவை முஸ்தபா ஆசிரியன்