பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமுதனஅடிகள்

115




சமய சமரச முயற்சியில் மணவையார் பங்கும் பணியும்

சாதி சமய சம்பிரதாயங்களைக் கடந்த நிலையில் அனைவரையும் ஒருசேர அன்பு செய்த சித்தர்களைப் போலவே முஸ்லிம் சூஃபிகளும் சமரசவாதிகளாக விளங்கியதை மணளையார் கட்டிக்காட்டத் தவறவில்லை. தாயுமானவரும் குணங்குடி மஸ்தானும் வெவ்வேறு சமயச்சார்புடையவர்களாயினும் அவர்களின் சிந்தனையும் கருத்துகளும் வேறுபாடு காணவியலாத வண்ணம் ஒன்றுபோலவே அமைந்துள்ளன என்பதை மணவையார் மனநிறைவுடன் விளக்குகிறார். அவர்கள் தங்கள் பாடல்களில் கையாண்டுள்ள சொல்லாட்சியும் கூட ஒரே மாதிரி அமைந்து உணர்வு ஒற்றுமைக்குக் கட்டியங் கூறுவது சிறப்பானதாகும்.

'பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூரண ஆனந்தமே'

என்று தாயுமானவரும்,

'பார்க்குமிடம் எல்லாம் பரிபூரணமாக
ஏற்கையுடன் நின்ற இயல்யே நிராமயமே'

என்று குணங்குடியாரும் ஒரே கருத்தினை ஒத்த சொல்லாட்சியுடன் அமைத்துப் பாடுவதைத் தக்க சான்றாக மணவையார் காட்டி மகிழ்கிறார்.

உருவ வழிபாட்டை விடுத்து ஒளி வடிவாக இறைவனை வணங்கிய வடலூர் வள்ளலாரின் இறையுணர்வுக்கும்,

அல்லாஹ் மண் விண் இவ்விரண்டில்
ஒளியாய் இருக்கின்றான்'

எனத் திருக்குர்ஆன் திருமறை கூறுவதற்குமுள்ள ஒற்று மையை மணவையார் எடுத்துக்காட்டுகிறார்.