பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

மணவையாரின சமய நல்லிணக்கப் பணிகள்


 அவ்வாறே குணங்குடி மஸ்தான் போன்ற இஸ்லாமிய மெய்ஞ்ஞானிகள் தங்கள் சமய சமரச உணர்வுகளை வெளிப்படுத்த அரபுச் சொற்களை எந்த அளவுக்குப் பயன் படுத்தினார்களோ, அதே அளவுக்கு இந்து சமயத் தத்துவச் சொற்களான நந்தீசுவரன், விட்டுணு, உருத்திரன், சிவன், அம்பலம், சக்தி, தட்சிணாமூர்த்தி போன்ற சொற்களைத் தங்கள் ஞானப் பாடல்களில் கையாண்டுள்ள சமய நல்லிணக்க உணர்வினை மணவையார் விதந்து போற்றுகின்றார்.

அவ்வாறே இந்திய சூஃபி ஞானியாகிய காஜா நஸ்ருத்தீன் என்பவர் காய சுத்தி (தஸ்கிய நப்ஸ்), இதய சுத்தி (திஸ்பியா கல்பு), ஆத்ம சுத்தி (தஜ்லியா ரூஹ்) ஆகிய மூன்று கோட்பாடுகளும் சூஃபியிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் எனச் கட்டுவதை மணவையார் குறித்துக் காட்டுகின்றார்.

குணங்குடி மஸ்தான், தக்கலை பீர் முகம்மது அப்பா, தென்காசி ரசூல் பீவி, இளையான்குடி கச்சிப்பிள்ளயம்மாள் போன்ற இஸ்லாமிய மெய்ஞ்ஞானிகள், பிற சமயங்களைச் சார்ந்த பலரைத் தங்கள் சீடர்களாகக் கொண்டிருந்த பெற்றியைக் கொண்டாடும் மணவையார்,

"தீதுமத பேதங்கள் அற்றுமே எங்குமிது
செல்வதும் எக்காலமோ"

என மதபேதமற்ற சமரச உணர்வு முழுமையாக மக்களிடம் முகிழ்த்தெழ வேண்டுமெனக் குணங்குடியார் மனமுருகிப் பாடுவதை நமக்கு நினைவூட்டுகிறார்.

தவறான பிரச்சாரம் தகர்த்த மணவையார்

இந்திய வரலாற்றில் பல்வேறு சமயங்களைச் சார்ந்த மன்னர்கள் கொடுங்கோலர்களாக விளங்கினர் என்பதை வரலாறு வகுத்துக்காட்டுகின்றது. இக்கொடுங்கோன்மை அவ்