பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொகுப்புரை


உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்நூல் அறிவியல் தமிழறிஞர் மணவையாரின் பல்துறை நூல்களையும் பன்முகப்பட்ட அவர்தம் பணிகளையும் பற்றி தக்கவர்களைக் கொண்டு ஆயும் ஆய்வு நூல் என்பதைவிட அறிவியல் தமிழ் என்ற ராஜபாட்டையில் தமிழை 21ஆம் நூற்றாண்டுக்குப் பீடு நடைபோட்டு மணவையார் அழைத்துச் செல்லும் பாங்கை விவரித்துக் கூறுவதே நோக்கமாகும்.

கற்றறிந்த தமிழறிஞர்களெல்லாம் கடந்த காலத் தமிழை - சங்க காலத் தமிழைப்பற்றி அசைபோடுவதையே பெருந்தொண்டாக, தமிழ்ப் பணியாகக் கருதிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், அடுத்துவரும் நூற்றாண்டுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தமிழை அறிவியல் தமிழாக - வளர்த்தெடுக்கும் முயற்சியில் கடந்த நாற்பதாண்டுகளாக முனைப்போடு உழைத்து வரும் அன்னாரின் தகைமையை - முயற்சிகளை அதனால் தமிழ் பெற்றுள்ள வளமிகு சிறப்பை ஆய்வு உரைகல்லில் உரைத்துப் பார்ப்பதே இந்நூலின் நோக்கமாகும்.

மணவையாரின் மாண்புகளை விவரிக்க முனைந்த பேராசிரியர் அறிவரசன், மணவை முஸ்தபா தன் தனித்துவத் தமிழ்த் தொண்டால் பிற தமிழறிஞர்களைக் காட்டிலும் எவ்வகையில், எதனால் வேறுபட்டு விளங்குகிறார் என்பதை "உண்மை" இதழில் விவரிக்கும்போது,

"மணவை முஸ்தபா - தமிழை அறிந்தவர்கள் அனைவரும் அறிந்த பெயர்; தமிழை அறிந்தவர்கள் அறிந்திருக்க வேண்டிய பெயர்; தமிழை எந்த வகையில் அறிந்திருக்க வேண்டுமோ, அந்த வகையில் அறிந்த அனைவர்க்கும் அறிமுகமாகியுள்ள பெயர்.