பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். இராதா செல்லப்பன்

127


பொருட் செறிவோடும் கூற முடியும். எத்தகைய அறிவியல் நுட்பக் கருத்துகளையும் தெளிவாகவும் திடமாகவும் சொல்ல முடியும். ஏனெனில், தமிழ் கடந்த கால மொழி மட்டுமல்ல்; நிகழ்கால மொழியுமாகும், ஆற்றல் மிக்க எதிர்கால மொழியுமாகும். பல நூற்றாண்டுகளாக அவ்வப்போது ஏற்பட்ட சமுதாய மாற்றங்களுக்கேற்ப உருவான காலத் தேவைகளையெல்லாம் நிறைவு செய்து காலத்தை வென்று வாழும் தமிழ், இன்றைய அறிவியல் தேவையையும் நிறைவு செய்து ஆற்றலோடு இயங்கவல்ல மொழியாக உருமாறும். நாமெல்லாம் அதற்கு முனைப்போடு உழைக்க வேண்டும். தமிழ் கடந்த காலத்தில் இலக்கிய மொழியாக, இடைக்காலத்தில் சமய, தத்துவ மொழியாக விளங்கியது போன்று எதிர்காலத்தில் ஆற்றல்மிக்க அறிவியல் மொழியாக, தொழில் நுட்ப மொழியாக, மருத்துவத் தமிழாக இன்னும் எத்தனை புதுத் துறைகள் உருவாகுமோ அத்தனை துறைகளைச் சார்ந்த மொழியாகத் தமிழை வளர்க்க, வளப்படுத்த இன்று முதல் என் வாழ்வை ஒப்படைத்துக் கொள்ள உங்கள் அனைவர் முன்னிலையிலும் உறுதி எடுத்துக் கொள்கிறேன். இன்று முதல் தமிழில் எதையும் கூற முடியும் என்பதை வெறும் சொல்லால் அல்ல; செயலால் நிரூபிப்பதே என் வாழ்வின் ஒரே இலட்சியம்; குறிக்கோள். இப்பணிக்கு, இப்போது எனக்குக் கிடைத்துள்ள கல்லூரி ஆசிரியர் பணியை இப்போதே விட்டு விடுகிறேன். அறிவியல் தமிழ் வளர்ச்சிப் பணியையே இனி என் வாழ்வுப் பணியாக இன்று முதல் ஏற்கிறேன்" என்று தமது கல்லூரி ஆசிரியர் வேலையைப் புறக்கணித்துவிட்டு, அறிவியல் தமிழ் வளர்ச்சியிலே தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் மணவையார்.

முஸ்தபா அவர்கள் வெறும் வாய்ச்சொல் வீரரல்ல, செயல்வீரர் என்பதை அவரது 'யுனெஸ்கோ கூரியர்'