பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் இராதா செல்லப்பன்

133


களுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கம் தரும் அகராதி ஒன்றினை டி.வி சாம்பசிவம் பிள்ளையவர்கள் பதிப்பித்தார். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன வெளியீடுகளில் உயிரியல் கலைச் சொற்கள் பல பயன்படுத்தப் பெற்றன. தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிவியல் களஞ்சியத்தில் பல மருத்துவக் கலைச் சொற்களும் அவற்றிற்கான விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பல்வேறு கலைச் சொல் தொகுதிகள், அகராதிகள், களஞ்சியங்கள் இவற்றிற்கெல்லாம் மருத்துவக் கலைச் சொற்கள், விளக்கங்கள் ஆகியவை இடம் பெற்றிருந்தாலும் மருத்துவத் துறைக்கென்றே தனியாக ஒரு 'மருத்துவக் கலைச் சொல் களஞ்சிய'த்தை முதன்முதலில் உருவாக்கிய பெருமை மணவை முஸ்தபாவிற்கே உரியது.

தமது கலைச் சொல் களஞ்சியக் கோட்பாட்டினை முஸ்தபா அவர்கள் மிக அழகாக நம்முன் வைக்கிறார். "நூல் எழுதுவோருக்கும் கற்பிக்கும் ஆசிரியர்கட்கும் படிப்பவர் கட்கும் மட்டும் பயன்படுவதோடமையாது, சாதாரண வாசகர்களுக்கும் பயன்பட வேண்டும். ஆங்கிலக் கலைச் சொல்லுக்கு நிகரான தமிழ்க் கலைச் சொல்லும் அக்கலைச் சொல்லுக்கு விளக்கமாக ஓர் அறிவியல் செய்தியும் படிப்போர்க்குக் கிடைக்க வேண்டுமென விழைந்தேன். அதையும் பட விளக்கத்தோடு தந்துதவ வேண்டுமென விரும்பினேன்" என்று களஞ்சிய வகைக் கருவி நூலின் கட்டமைப்பினை மணவையாரே விளக்குகின்றார். இக் களஞ்சியத்தில் மருத்துவத் துறையின் 15 பிரிவுகளுக்கான ஆங்கிலக் கலைச் சொற்களுக்கும் நேர்த் தமிழ்ச் சொற்களும் விளக்கங்களுடன் வரைபடங்களும் இடம் பெறுகின்றன. ஏறத்தாழ 6,000 கலைச் சொற்கள் பதிவுச் சொற்களாக உள்ளன.