உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். இராதா செல்லப்பன்

139


பட்டுள்ளது. முன்னர்க் குறிப்பிட்ட அறிவியல், தொழில் நுட்ப, மருத்துவக் களஞ்சியங்களில் ஏறத்தாழ 25,000 கலைச் சொற்களை விளக்கங்களுடன் அறிவியல் தமிழ்த் துறைக்கு நல்கியுள்ளார் மணவையார். நுண்களஞ்சியங்களாக (micropaedia) அமைந்துள்ள இவை வருநாளில் பெருங்களஞ்சியங்களாக (macropaedia) உருவாவதற்கான அடிப்படைகளாக உள்ளன. அடிப்படை என்ற ஒன்று இருந்தால்தான், அதில் மாற்றங்கள், சீராக்கங்கள் செய்து மேன்மேலும் சிறப்பான, பொருத்தமான கலைச் சொற்களையும் விளக்கங்களையும் பெற முடியும். அகராதிப் பணியும் களஞ்சியப் பணியும் என்றுமே முழுமையான பணியல்ல. அவை மாற்றத்திற்கு உட்படவேண்டும்; மேம்பாட்டிற்கு இடந்தர வேண்டும்.

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் லலிதா காமேஸ்வரன் அவர்களை ஆய்வாளராகவும், திரு. இரா. நடராசன், டாக்டர் மு. செம்மல் சையத் மீராவைத் தொகுப்புத் துணைவர்களாகவும் கொண்டு சிறப்பாக இம் மருத்துவக் கலைச் சொல் களஞ்சியத்தை உருவாக்கியுள்ள வளர்தமிழ்ச் செல்வர் திரு. மணவை முஸ்தபா அவர்களிடம் அறிவியல் தமிழுலகம் இன்னும் பல்லாயிரக்கணக்கான கலைச் சொற்களை, விளக்கங்களுடன் கூடிய களஞ்சியங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறது. அவர்தம் அறிவியல் தமிழ் ஆர்வம் வாழ்க! தொண்டு வளர்க! பணி சிறக்க! என இறைவனை வேண்டி அமைகிறேன்.