பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராம்குமார்

147


பெயர்ப்புணர்வு ஏற்படாத வகையில், மூலமாகவே தாய் மொழியில் எழுதப்பட்டதைபோன்று அவர்களுக்கு ஆர்வ மூட்டும் வகையில் நடை, உத்தி அனைத்தையும் கையாண்டு எழுதப்படுவதே பொதுமக்களார்வ மொழி பெயர்ப்பாகும் என்கிறார் மணவையார்.

(4) துல்லியமான மொழிபெயர்ப்பு (Accurate Translation)

மிகச்சிறந்த மொழி பெயர்ப்பு முறையான இதில் மூலமொழி உணர்த்தும் கருத்தையோ, உணர்வையோ சிறிது கூடச் சிதைக்காமல் கருத்து, நடை, உத்தி ஆகிய அனைத்தும் மூல நூலாசிரியனை ஒட்டியே அமைய வேண்டும். அறிவியல், சட்டத் துறைகளுக்கு இவ்வகையான மொழி பெயர்ப்பே ஏற்றது. பொருளறிவு, மொழியறிவு, எழுத்தாற்றல் ஆகியவைகள் கைவரப்பெற்ற தகுதிமிக்க மொழி பெயர்ப்பாளர்களே இதைச் செய்யமுடியும்.

(5) மொழியாக்கம் (Transcreation)

இலக்கிய மொழி பெயர்ப்புக்கு - குறிப்பாக கவிதை மொழிபெயர்ப்புக்கு ஏற்ற முறையாக உள்ளதே மொழியாக்கம் என்னும் உத்தி. மூல நூல் ஆசிரியன் கையாண்ட கருவை அடியொற்றி பெயர்ப்பு மொழியின் மரபு, இலக்கண விதிமுறைகளுக்கு ஏற்ப செய்யப்படுவது. சில சமயங்களில் மொழி பெயர்ப்பு என்ற நிலையிலிருந்து மேலேறி தழுவல் என்று கூறப்படுவதும் உண்டு என்கிறார்.

(6)விரிவான மொழிபெயர்ப்பு (Magnified Translation)

மூல நூலின் கருத்துகளை ஒட்டி அதிகச் செய்திகளைச் சேர்த்து, விளக்கமாக எழுதி பொருள் விளங்க மொழி பெயர்ப்பதே விரிவான மொழிபெயர்ப்பு.