பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

தொகுப்புரை



மணவையாரின் தமிழ்ப்பணி ஆரவாரமேதுமின்றி அமைதிப் புரட்சியாக அமைந்துள்ள ஒன்றாகும். இதைப் பற்றி மறைந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள்:

"வெறும் இலக்கியங்களை மட்டுமே தெரிந்து அல்லது அறிந்து அல்லது ஆய்ந்து தமிழறிஞர்களாக உலா வந்து கொண்டிருப்போரே பொது மக்களுக்கும் புல மக்களுக்கும் அறிமுகம் ஆகிவருகின்ற இந்நாளில் தமிழ்ச் சொல்லியல், மொழியியல், அறிவியல் ஆகிய கூறுகளை நன்கு உணர்ந்து கொண்டு, நம் இயற்றமிழ் மொழியை அறிவியல் மொழியாக வளர்த்து வருவதில் பேருழைப்பை நல்கிவரும் தமிழறிவியல் பேரறிஞர் மணவை முஸ்தபா அவர்கள் அனைவரும் பாராட்டும் வகையில் மிகச்சிறப்பாகப் பணிசெய்து வருகிறார். அவரின் தமிழ்த் தொண்டுக்கே பெருஞ்சிறப்புத் தன்மை தருவது, தம் அளவில் அவர் எவ்வகை ஆரவாரமும் விளம்பரத்தனமும் தன்முனைப்பும் இன்றி, அமைதியாகப் பாடாற்றி வருவதுதான்.

"அவர் எப்பொழுதும் தமிழியலைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பது, அவருடன் தொடர்பு கொண்டிருப்பவர்களுக்கு நன்கு தெரியும். அவர் சிந்தனை, பேச்சு, எழுத்து, செயல் அனைத்தும் தமிழ் வளர்ச்சியை, அதுவும் அறிவியல் தமிழை வளர்த்தெடுப்பது பற்றியே சுற்றிச் சுழன்று கொண்டிருப்பதை, அவரை நெருங்கிப் பார்ப்பவர் நன்கு விளங்கிக் கொண்டிருக்க முடியும். அறிவியல் தமிழுக்காக அவர் ஆற்றிய, ஆற்றி வருகின்ற பணிகள் அளவிறந்தனவாகும்"

என 'தென் மொழி' மார்ச் 95 இதழில் தெளிவாகக் கூறி விளக்கியுள்ளார்.

அது மட்டுமல்ல, மணவையாரின் தமிழ்ப்பணி மற்றவர் தமிழ்ப்பணியினின்றும் எவ்வகையில் வேறுபட்டுள்ளது என்பதை விளக்கும்போது,