158
தமிழ்க் களஞ்சியம் மணவையாா்
4. மருத்துவக் கலைச் சொல் களஞ்சியம் (முதற் பகுதி)
5. கணினி கலைச் சொல் களஞ்சியம்
இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக கலைக் களஞ்சியங்கள் தமிழிலேதான் வெளியிடப்பட்டன. பெரியவர்கட்கு பத்துத் தொகுதிகளும் குழந்தைக் கலைக் களஞ்சியங்கள் பத்துத் தொகுதிகளும் வெளியிடப்பட்டன. இக்கலைக் களஞ்சியங்கள் அனைத்தும் தமிழறிஞர் ம.ப. பெரியசாமித் தூரன் அவர்களைத் தலைமைப் பதிப்பாசிரியராகக் கொண்டு பதிப்பிக்கப்பட்டு, தமிழ் வளர்ச்சிக் கழகத்தினால் வெளியிடப்பட்டவைகளாகும். பெரியவர்கட்கான தொகுதிகளின் அடிப்படையிலேயே குழந்தை கலைக் களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டன.
அகர வரிசையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழந்தைக் கலைக் களஞ்சியத் தொகுதிகளைப் பயன்படுத்தும் சிறுவர்கள் எழுத்துக்கொரு தொகுதியாகப் பத்துத் தொகுதிகளையும் புரட்டி செய்தியறிய வேண்டிய இடர்ப்பாடு. மேல்நாடுகளில் இச்சங்கடத்தை நீக்கும் வகையில் அகர வரிசையில் குறும் (மினி) கலைக் களஞ்சியங்கள் இருப்பதுபோல் தமிழில் இல்லையே என்ற ஏக்கம் பலருக்கும் இருந்து வந்தது. அதிலும் மணவை முஸ்தபாவுக்கு அம் மனக்குறை நீண்ட காலமாக சற்று அதிகமாகவே இருந்து வந்தது. இவ்வுணர்வையும் கருத்தையும் பலமுறை கலைக் களஞ்சியத் தலைமைப் பதிப்பாசிரியர் திரு. ம.ப. பெரியசாமித் தூரன் அவர்களிடம் எடுத்துக் கூறி ஆலோசித்து வந்தார். அவரும் இவரது ஆவலுக்கு உடன்பட்டவராக இருந்தபோதிலும் திரு. பெரியசாமித் தூரன் உடல் நிலை அத்தகைய மினி சிறுவர் கலைக் களஞ்சியத்தை உருவாக்க இடந்தரவில்லை. விரைவில் அவர் காலமாகிவிட்டார்.