பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

'தமிழக களஞ்சியம்' மணவையார்


தக்கதாகும். இந்நூல் அமைப்பிலும் வடிவிலும் வண்ணத்திலும் இளம் சிறார்களைப் படிக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. டபுள் கிரவுன் அளவில் 24 பக்கங்களைக் கொண்ட இக் குறும் 'சிறுவர் கலைக் களஞ்சியம்' வண்ணப் படங்களுடன் மீரா பப்ளிகேஷன் வெளியீடாக 1990இல் வெளிவந்துள்ளது. தமிழில் முழுமையாக வெளிவந்த முதல் குறும் சிறுவர் கலைக் களஞ்சியம் இதுவேயாகும் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

இளைஞர் இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்

சிறுவர் கலைக் களஞ்சியத்தை வெளியிட்ட அடுத்த ஆண்டே 'இளைஞர் இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்’ என்ற பெயரில் இஸ்லாமியக் கலைக் களஞ்சியமொன்றைத் தமிழில் வெளியிட்டார்.

தமிழில் பெரியவர்கட்குப் பயன்படும் வகையில் மூன்று இஸ்லாமியக் கலைக் களஞ்சியப் பெருந் தொகுதிகளைப் பன்னூலாசிரியர் அல்ஹாஜ் எம்.ஆர்.எம். அப்துற்- ரஹீம் அவர்கள் சிறப்பாக எழுதி வெளியிட்டார். ஆனால், இஸ்லாமியச் சிறுவர்கட்குப் பயன்படும் வகையில் 'மினி' இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் இல்லையே என்ற ஏக்கத்தைப் போக்கும் வகையில் 'இளைஞர் இஸ்லாமியக் கலைக் களஞ்சிய'த்தை உருவாக்கி வெளியிட்டுள்ளார் மணவையார். இதைப்பற்றி மணவை முஸ்தபா குறிப்பிடுகிறார்:

"இஸ்லாமிய இளைய தலைமுறையினர் இஸ்லாம் தொடர்பான பல்வேறு செய்திகளை அறியவும் தெளிவு பெறவும் உறுதுணையாய் அமையவல்ல கையடக்க இஸ்லாமியக் கலைக் களஞ்சியமொன்றை உருவாக்க வேண்டும் என்ற பேராவல் பல ஆண்டுகளாக உள்நெஞ்சத்தில் கனன்று கொண்டிருந்தது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.