பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மு. அறிவானந்தம்

165


தங்கவும் பேருதவியாக அமையும் என்பது திண்ணம்" எனக் கூறி விளக்குவதோடு "முந்தைய களஞ்சியங்கள் பலவற்றை முன்மாதிரியாகக் கொண்டு இக்களஞ்சியம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் உள்ள அறிவியல் கட்டுரைகள் என் முப்பதாண்டு அறிவியல் பட்டறிவின் அடிப்படையில் எழுதியிருப்பினும் அந்தந்தத் துறை வல்லுனர்கள் கட்டுரைகளைப் பார்வையிட்டு, மாற்ற திருத்தங்கள் செய்த பின்னரே அச்சு வாகனமேறின" எனக் கூறுவதன் மூலம் எவ்விதப் பொருட் பிழையுமின்றி மிகச் சரியான முறையில் தவறின்றி இருக்கவேண்டுமென்பதில் பெருங்கவனம் செலுத்தியுள்ளது தெளிவாகிறது.

மேற்கூறிய மூன்று குறும் (Mini) கலைக் களஞ்சியங்களும் மூன்று வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தனவாகும். இவைகளை இவர் பேருழைப்பை நல்கி உருவாக்கியபோதிலும் இம் மூன்று நூல்களுமே அந்தந்தத் துறை சார்ந்த வல்லுனர்களால் தக்கமுறையில் மேற்பார்வையிடப்பட்ட பிறகே வெளிவந்துள்ளன என்பது இவற்றை முழுமையுடைய நூல்களாக வெளிக் கொண்டுவர வேண்டும் என்பதில் இவருக்குள்ள அக்கறையைக் காட்டுகிறது.

1990 முதல் 1994 முடிய நான்கு ஆண்டுகளில் மூன்று கலைக் களஞ்சியங்களைக் கொண்டு வந்து புதுச் சாதனை படைத்த பெருமையும் இவருக்குண்டு. அதிலும் தனியொரு மனிதனின் தனிப்பெரும் முயற்சியாக முகிழ்த்துள்ளது என்பது எண்ணி வியக்கத்தக்கதாக உள்ளது. இஃது இவருக்குள்ள பரந்த நூலறிவுக்கும் தளரா முயற்சிக்கும் அயரா உழைப்புக்கும் கட்டியங் கூறுவன என்பதில் ஐயமில்லை.

இனி, தனித்துவமிக்க இவரது அறிவியல் கலைச் சொல் களஞ்சிய அகராதிகளைப் பற்றிச் சிறிது ஆராய்வோம்.