பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

175




மொழி பெயர்ப்புப் பணியில்
மணவையார்

அமுதன்


மணவையாருக்கு இயல்பாக ஏற்பட்டிருந்த தமிழார்வமும் தமிழ்ப்பற்றும் தமிழுக்கு ஆக்கம் தேடும் உணர்வாக முகிழ்த்தெழுந்ததில் வியப்பொன்றுமில்லை. தமிழ்ப் பணிக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள முனைந்த போதே, அதற்குரிய ஆரம்ப வழியாக மணவையார் மனதிற்பட்டது மொழிபெயர்ப்புத் துறையேயாகும்.

பிறமொழிகளிலிருந்து அறிவுச் செல்வங்களையெல்லாம் தமிழ் மொழியில் பெயர்க்கப் பணித்த “பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்" என்ற முண்டாசுக் கவிஞனின் பாடல் வரிகள் மணவையாரின் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டே இருந்திருக்க வேண்டும்.

கல்லூரியில் படிக்கும்போதே மலையாள மொழியையும் கற்றுத் தேர்ந்தார். பின்னர், மலையாள மொழிக்கதைகளையும் கட்டுரைகளையும் தமிழில் பெயர்த்து இதழ்களுக்கு அனுப்பி வெளியிடச் செய்தார். இதன் மூலம் மொழிபெயர்ப்புப் பிரச்சினைகளை நேரடியாகச் சந்திக்கவும் அவற்றிற்கான தீர்வுகளைக் கண்டறியவுமான வாய்ப்பு இவருக்கு நேரடியாகக் கிடைத்தது.