187
தமிழ் வளர்ச்சியில்
"கூரியர்" பங்கு
இரா. நடராசன், எம்.ஏ., பி.ஏ.எல், இதழியல் பட்டயம், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (ஓய்வு)
ஐக்கிய நாடுகள் அமைவனத்தின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமாகிய யுனெஸ்கோ 30 உலக மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியிட்டு வரும் திங்களிதழ் “யுனெஸ்கோ கூரியர்". இந்தியாவில் தமிழிலும் இந்தி மொழியிலும் மட்டுமே இவ்விதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழக அளவில் மட்டுமின்றி, பன்னாட்டளவிலும் அனைத்து அறிவியல் துறைகளையும் தெளிவாகவும், துல்லியமாகவும் தமிழில் தரமுடியும் என்பதை "யுனெஸ்கோ கூரியர்" தமிழ்ப் பதிப்பு ஆழமாகவும், அழுத்தமாகவும் உலகுக்கு உணர்த்தி நிலைநாட்டியிருக்கிறது.
செய்தியாளர்
யுனெஸ்கோ நிறுவனம் 1945இல் நிறுவப்பெற்ற பிறகு தனக்கென ஒரு திங்களிதழைத் தொடங்க முடிவு செய்தது. இந்த இதழக்கு "Courier" எனப் பெயரிடப்பட் டது. ஃபிரெஞ்சு மொழியில் " Courier" என்றால், "செய்தியாளர்" (Messenger) என்று பொருள். இந்த இதழ் 1946 முதல் வெளிவரத் தொடங்கியது. அது முதல் இவ்விதழ் "உலகின் பலகணி"யாக (Window to the world) விளங்குகிறது.