பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17
அறிவியல் தமிழின் விடிவெள்ளி

ஆர். ராமசாமி

தமிழ்த் தொண்டு

தமிழ்த் தொண்டாற்றுதல் என்றாலே இலக்கியத் தமிழுக்கு, இயற்றமிழுக்குத் தொண்டாற்றுதல் மட்டுமே தமிழ்த் தொண்டு என்று மிகப் பலர் எண்ணிச் செயல்பட்டு வருகின்றனர். ஒருவர் எத்தனை பாடல்களை எழுதினார், எத்தனை புனைகதைகளை எழுதினார், எத்தனை மேடைகளில் முழங்கினார், எத்தனை பட்டிமன்றங்களில் பலரையும் சிரிக்க வைத்தார் என்பதைக் கொண்டே ஒருவரது தமிழ்த்தொண்டு மதிப்பிடப்படுவது நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

முடியும் தருவாயில் உள்ளது இருபதாம் நூற்றாண்டு அறிவியல் ஊழி, வாசலில் நிற்கும் இருபத்தொன்றாம் நூற்றாண்டு கணினி - தகவல் தொடர்பின் காலமாக விளங்கப்போகிறது. இந்தச் சூழ்நிலையில் அறிவியல் தமிழ் மேம்படவும், தமிழில் அறிவியல் கருத்துகள், சிந்தனைகள், கண்டுபிடிப்புகள், ஆய்வுகள் வெளிவரவும் எவர் பாடுபடுகிறாரோ அவரது பணியையே மற்ற அனைத்துத் துறைகளிலும் ஒருவர் ஆற்றும் பணியைவிட மேம்பட்டதாகக் கருதப்பட்டு போற்றப்படும்; பட வேண்டும். அதுவே தமிழுக்கும் நல்லது; தமிழ்ச் சமுதாயத்துக்கும் நல்லது; அதுவே தமிழர்கள் முன்னேற வழி வகுக்கும்.