பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆர் ராமசாமி

19


"தமிழுக்கு எல்லா வகையிலும் ஆக்கம் தேடி இடையறாது உழைத்து வரும் திரு. மணவை முஸ்தபா தமிழுக்குக் கிடைத்தது தமிழ்நாடு செய்த பெரும் பேறு" என்று பொருளாதாரப் பேரறிஞரும், யுனெஸ்கோ உதவித் தலைமை இயக்குநருமான மால்கம் எஸ். ஆதிசேவுையா போற்றிப் புகழ்ந்துள்ளார்.

இளமையில் வறுமை

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிலாத்து என்ற கிராமத்தில் 1935 ஜூன் 15இல் மீராசா என்பவரின் மகனாகப் பிறந்தவர் முஸ்தபா. அவருக்கு நான்கு வயது இருக்கும் போது உறவினர்களின் மோசடியால் சொத்துக்களை இழந்து குடும்பம் இடம்பெயர்ந்தது.

மணப்பாறையில் குடியேறிய பின்னர், நெல்லை வாங்கி, அவித்து, அரிசியாக்கி விற்று; அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடந்து வந்தது. 'அரிசிக் காரக் குடும்பம்' என்று அவரது குடும்பத்துக்குப் பெயர் இருந்தது. முஸ்தபாவின் அண்ணன்கள் இருவரும் பள்ளியில் ஐந்து, ஆறு வகுப்புகளைத் தாண்டாமல் நிறுத்தி விட்டதால், இவரைப் பள்ளியில் சேர்க்கவே இவர் தந்தைக்கு விருப்பம் இல்லை.

பின்னர் தன்னுடைய ஏழாவது வயதில் உள்ளூர் பள்ளிக்குச் சென்று 'எனக்குப் படிக்க ஆர்வமாக உள்ளது. என்னையும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள்' என்று ஆசிரியரிடம் அழுது, கெஞ்சி, பள்ளியில் சேர்ந்தார். சேர்க்கைப் பதிவேட்டில் கையெழுத்திட தந்தையை அழைத்து வருவதே பெரும்பாடாயிருந்தது. பள்ளிக்குப் போனாலும் இரண்டு அண்ணன்களுக்குச் சமமாக வீட்டு வேலைகளை செய்வதாகச் சம்மதித்தால் மட்டுமே பள்ளிக்குப் போ என்று