பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆர். ராமசாமி

23


வளர்ச்சிக்காக என் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொள்கிறேன். இப்பணிக்கு என்னை அர்ப்பணித்துக் கொள்வதன் அடையாளமாக எனக்கு இப்போது கிடைத்துள்ள கல்லூரி ஆசிரியர் பதவியைத் தூக்கி எறிகிறேன்" என்று கூறி அவருக்கு வந்த வேலை நியமன ஆணையை சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தார். துணைவேந்தர் முதலான அனைவரும் இவரை நீண்ட நேரம் கைதட்டிப் பாராட்டினார்கள்.

அன்று முதல் அறிவியல் தமிழ் ஒன்றை மட்டுமே தன் வாழ்வின் ஒரே குறிக்கோளாகக் கொண்டு கண்ணடை போட்ட குதிரை போல் நேர்பாதையில் பயணம் சென்று கொண்டிருக்கிறார். அறிவியல் நுட்பங்களைக் கூறும் சொல்லாக்கம் தமிழில் செய்ய இயலாது என்ற கருத்தரங்கப் பேச்சு இவரது காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. அறிவியல் தமிழ் வளர்ச்சியின் இரு கண்களாகக் கருதப்படும் சொல்லாக்கமும், மொழி பெயர்ப்புமே அவரது அறிவியல் தமிழ்ப் பணிகளாக இருக்க வேண்டும் என்பதில் உறுதி ஏற்பட்டது.

யுனெஸ்கோ கூரியர் பணி

தென் மொழிகள் புத்தக டிரஸ்டில் பகுதி நேரத் தமிழ்ப் பதிப்பாசிரியர் பணி மாதம் ரூ. 150/- சம்பளத்தில் இவருக்குக் கிடைத்தது. கல்லூரி ஆசிரியர் ஊதியத்தில் அது நான்கில் ஒரு பங்காக இருந்தபோதிலும் அவருக்கு இலட்சியப் பயணத்துக்கு ஏற்ற பாதையில் பயணம் செல்ல உதவும் என்பதால் அவ்வேலையை ஏற்றுக் கொண்டார். 'டிரஸ்ட்' வெளியிட்ட 'புத்தக நண்பன்' என்ற தமிழ் காலாண்டிதழ் பணியையும் ஏற்றுச் செய்யத் தொடங்கினார்.