பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

அறிவியல் தமிழின் விடிவெள்ளி
1967இல் யுனெஸ்கோ கூரியர் தமிழ்ப் பதிப்பு தொடங்கப்பட்டபோது பல புகழ் பெற்ற இதழாசிரியர்கள் ஆசிரியர் வேலைக்குப் போட்டியிட்டபோது தேர்வுக் குழுவில் இருந்த பேராசிரியர் தெ.பொ.மீ. தலையிட்டு "அறிவியல் தமிழுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு இலட்சியப் பயணம் மேற்கொண்டுள்ள முஸ்தபாவை இதற்குப் பொறுப்பாசிரியராக நியமிப்பதே பொருத்தம் என்று கூறியதுடன் "முஸ்தபாவால் முடியாது என்றால் அது தமிழாலேயே முடியாது என்பதற்கு ஒப்பாகும்" என்று பெருமையுடன் கூறி அப்பணியை இவருக்குப் பெற்றுத் தந்தார்.

அன்று முதல் இன்றுவரை 32 ஆண்டுகளுக்கும் மேலாக கூரியர் ஆசிரியராக இருந்து வருகிறார். தமிழ்க் கூரியர் ஆசிரியர் என்ற முறையில் இவரது சிறப்பான சேவையைப் பாராட்டி யுனெஸ்கோ 1972இல் சிறப்பு விருதளித்துப் போற்றி உள்ளது. யுனெஸ்கோ பாராட்டிய 'முதல் தமிழன்' என்ற பெருமையும் இவருக்குண்டு.

உலகின் பலமொழிகளில் வந்து கொண்டிருக்கும் கூரியர் பதிப்புகளில் சொல்லாக்கம், மொழிபெயர்ப்பு, வடிவமைப்பு போன்றவற்றில் தமிழ்ப் பதிப்பு நான்காவது இடத்தினைப் பெற்றுள்ளது, மணவையாரின் கடும் உழைப்புக்கும், திறமைக்கும் கிடைத்த வெற்றியாகும். சமுதாயம், அறிவியல், கலை, பண்பாடு போன்ற பல்வேறு துறைகளில் ஆங்கிலக் கட்டுரைகளை சொற்செறிவு, பொருட்செறிவு உடையதாக மொழிபெயர்ப்பு மூலம் கொண்டுவருகின்றார். பல்துறை ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை உருவாக்கி மொழிபெயர்ப்புகளை ஒருங்கிணைத்து வருகிறார். கூரியர் மூலமும் அவர் தொகுத்து வரும் அகராதிகள் மூலமும் ஆயிரக்கணக்கில் அல்ல இலட்சக்கணக்கில் புதிய கலைச் சொற்களை தமிழில் உருவாக்கி வருகிறார்.