பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மீரா

29


அளவில் பெற்ற பரிசுகள் இவரை தொடர்ந்து ஊக்குவிக்கும் உந்து சக்திகளாயின.

இவர், தான் எழுதும் கட்டுரைகளிலும் பேச்சுகளிலும் தூய தமிழ்ச் சொற்களைக் கையாள்வதில் தனிக்கவனம் செலுத்தினார். சங்க இலக்கியங்களையும் தற்கால உரை நடை நூல்களையும் கற்றதன் பயனாக நல்ல தமிழ்ச் சொற்கள் இவர் பேச்சிலும் எழுத்திலும் சரளமாக வந்து விழுந்து, பேச்சுக்கும் எழுத்துக்கும் ஒருவித கவர்ச்சியை - கனத்தைக் கொடுத்து வந்தன.

அறைகூவலான தலைப்புகள்

இவருக்கிருந்த சொல்லாட்சித் திறன் கவிதை எழுதத் தூண்டிய போதிலும் அதில் அவர் உள்ளம் முழு ஈடுபாடு கொள்ளவில்லை. கல்லூரிக் காலத்தில் கதை எழுதத் துவங்கினும் அதிலும் அவருக்கு முழு ஈடுபாடு ஏற்படவில்லை. இதற்கு ஒரு சிறப்பான காரணமும் இருந்தது. கவிதை புனையவும் கதை எழுதவும் எத்தனையெத்தனையோ பேர் இருக்கிறார்கள். அத்தனை பேருள் ஒருவனாகத் தான் இருப்பதை அவர் உள்ளம் விரும்பவில்லை. யாரையாவது முன்மாதிரியாகக் கொண்டு தமிழ்ப் பணி செய்யவும் அவர் உள்ளம் உடன்படவில்லை. அடுத்தவர் வழித்தடத்தின் மீது தன் வழித்தடம் அமைவதை அவர் உள்ளம் எப்போதுமே ஒப்பியதில்லை. சிறியதோ பெரியதோ தான் பதிக்கும் தடம் தனித்தன்மை மிக்கதாக இருக்க வேண்டும் என்ற வேட்கை இவருக்கு எப்போதுமே உண்டு. இந்த உணர்வே இவரை பிற்காலத்தில் வலுவான சுய சிந்தனையாளராக உருமாற்ற உதவியதெனலாம். இவ்வுணர்வு இவர் படிக்கும் காலம் தொட்டே இவர் பேச்சிலும் எழுத்திலும் இடையறாது இழையோடிக் கொண்டிருந்ததெனலாம். பள்ளி தொட்டு பல்கலைக் கழக இறுதிவரை தொடர்ந்து எழுத்துக்காகவும்