பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மீரா

37


துறையைத் தேர்ந்தெடுத்து, அத்துறை தொடர்புடையதாக தமிழை ஆக்கி, "அறிவியல் தமிழ்" எனும் புதுவகைத் தமிழை உருவாக்கி, அத்தமிழை இன்றைக்குத் தமிழ் வளர்ச்சியின் கொடுமுடியாகக் காட்டியுள்ளார் என்றால் அப்பெருமையின் பெரும் பகுதி இவரையே சாரும். கடந்த நாற்பது ஆண்டுகளாகக் கண்ணடை போட்ட குதிரை போன்று அறி வியல் தமிழ் என்ற ராஜபாட்டையில் ஓடி ஆயிரக்கணக்கான அறிவியல் கலைச் சொற்களை உருவாக்கி, தமிழில் மட்டுமல்லாது இந்திய மொழிகளிலேயே முதலாவது அறிவியல் கலைச் சொல் களஞ்சிய அகராதிகள் என்ற தனித்துவப் பெருமையோடு நான்கு கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டுப் புதிய அத்தியாயம் தொடங்கிப் புது வரலாறு படைத்துள்ளார் மணவையார்.

தமிழில் அறிவியலைத் திட்ப, நுட்பமாகச் சொல்ல முடியுமா என்பார்க்கு வெறும் சொல் அளவில் அல்லாமல் செயல் வடிவில் 'முடியும்' என்பதை அழுத்தத்திருத்தமாக எண்பித்துள்ளார் மணவையார். இன்னும் சொல்லப் போனால் ஆங்கிலத்தைவிட நுணுக்கமாகவும் தெளிவாகவும் அறிவியல் சொற்களை விளக்கிக் கூற முடியும் என்ப தற்கு இவரது அறிவியல் தமிழ் கலைச் சொற்களும் கலைச் சொல் களஞ்சிய அகராதிகளும் இவரது அறிவியல் நூல்களும் கட்டியங் கூறிக் கொண்டுள்ளன.

தமிழ்ப் பட்டதாரிகளால் வெறும் இலக்கிய, இலக்கணப் பணியாற்றவே இயலும் என்ற கோட்பாட்டை சுக்கு நூறாக உடைத்தெறிந்து, கற்ற தமிழ் இலக்கிய, இலக்கண அறிவை அடிப்படையாகக் கொண்டு எத்துறைச் செய்தியையும் திட்ப நுட்பமாக விளக்கும் ஆற்றல்மிகு சாதனமாகத் தமிழைப் பயன்படுத்துவதன் மூலம் தமிழை வெறும் இலக்கிய மொழியாக அல்லாது ஆற்றல்மிகு அறிவியல் மொழியாக மாற்றி, அறிவியல் தமிழ்ப் பணி ஆற்ற முடியும்