பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் வா.சா. பானு நூர்மைதீன்

51


வெற்றி உகந்ததல்ல எனப் பிரச்சாரம் செய்து ஆன்மிகத்தில் ஆழ்ந்தனர்.

இன்னும் பொருளாதாரம், எண்ணெய் வளம் எனச் சிறந்திருந்தும் இஸ்லாமியர் அண்மைக் காலம் வரை அறிவியல் வளர்ச்சியில் நாட்டம் செலுத்தவில்லை. மிக அண்மையில் ஓர் அறிவியல் எழுச்சி அபுல் கலாம் போன்றோரால் அரிதின் மலர்ந்துள்ளது. அது மலர்ச்சிக்கு வித்திட்டுப் பண்டைப் பெருஞானத்தை மீட்டு, முந்தையர் ஆயிரம் எண்ணம் சிறந்து வாழ்ந்த காலத்தை மீண்டும் வரவழைக்கும் முயற்சியாக மலர வேண்டும். எனவே அண்ணலார் (சல்) அவர்களின் கல்விக் கொள்கையின் அறிவுத் தேடலின் மூலம் அறிவியல் உணர்வைப் பெறலாம் என்ற போக்கு நம்மிடையே உணர்ந்து செயல்பட்டால் மீண்டுமொரு மலர்ச்சி பிரமிக்கத்தக்க அளவில் உருவாகும் என்பதில் ஐயமில்லை என நம்பிக்கை ஒளியுடன் நூலைமுடிக்கும் ஆசிரியர் நம் மனதிலும் நம்பிக்கை ஒளியேற்றுகின்றார்.

3. இஸ்லாமும் சமய நல்லிணக்கமும் (1996)

ஆசிரியரின் இஸ்லாமிய இலக்கியப்பணி இந் நூலளவில் தொடக்கம் பெறுதற்கும் ஒரு வலுவான காரணம் உண்டு. கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் தவறான கண்ணோட்டத்தில் இஸ்லாமிய நல்லிணக்க உணர்வுகள் சிலரால் மறைக்கப்பட்டன. மாற்றித் திரித்துக் கூறப்பட்டன; தவறாக விளக்கப்பட்டன; உண்மை நீண்ட நாள் உறங்க முடியாதன்றோ?

இஸ்லாத்தின் ஒருமைப்பாடு, நல்லிணக்க உணர்வு, பெருமானாரின் வாழ்வு, வாக்கு - இவை யாவும் உலகம் கண்டு உவக்கும் காலம் வரவே, அதனை வளப்படுத்தும் முகமாகவே இந்நூல் எழுதப்பட்டதாக ஆசிரியர் உரைக்கின்றார்.