பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

மணவையாரின் இஸ்லாமிய இலக்கியப் பணி


என்பதற்காகக் கரும்பை விரும்பாதவர் உண்டா?" எனக் கேட்ட பாணியே அருமை. டாக்டர் சி.பா.வோ சீறாப் புராணம்-சீரிய புராணம் என்பார். இந்நூலில் சிறந்த பகுதியே - சீறாவும் அதன் சார்பு நூல்களும், அவை அச்சு வாகனமேறிய வரலாறும் காட்டும் ஆழ்ந்த கட்டுரையான திரு. முத்துக் குமாரசாமி அவர்களின் கட்டுரை. அந்த வரலாற்றை முழுமைப்படுத்த அது தொடர்பான வாசகர் வட்டம் உதவும் எனத் தொகுப்பாசிரியர் எதிர்பார்க்கின்றார். மறைந்து கிடந்த இஸ்லாமிய இலக்கியப் பெருமையை மலர வைக்கும் நன்முயற்சியிது. "மறைத்தாலா தாழை மணம் குறையும்? நீரில் கரைத்தாலா தங்கம் கரையும்? கரையில் இறைத்தாலா வற்றிவிடும் ஏழ்கடல்?" என்பது போல், மறைந்திருந்தாலும் மங்கா மாண்புடைய இலக்கியங்களிவை; அவற்றின் பெருமை எத்துணை எடுத்து உரைத்தாலும் முற்றுப் பெறுமோ என்றெல்லாம் கட்டுரைத் தொகுப்பைக் காணும்போது எண்ணத் தோன்றுகிறது.

இந்நூலில் விரவியுள்ள பல அரிய செய்திகள் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் பற்றிய செவிவழிவந்த கர்ணபரம்பரையான சில கதைகள், வரலாற்று ஏட்டில் பதிவுசெய்யப்படாத சில நிகழ்ச்சிகள்; சில செய்திகள் - எனச் சீறாப் புராணத்தில் இடம் பெற்றுள்ளன; சீறாவில் இஸ்லாமிய மரபுகள் பற்றி விளக்கும் போது, சலாமுரைத்தல், பிஸ்மி, அல்ஹம்துலில்லாஹ் கூறுதல், மஹர் வழங்கல் போன்றவற்றை விரித்துரைத்து ஹசன் அவர்கள் தம் கட்டுரையைப் படைத்துள்ளார். தமிழுக்குப் புத்தொளிக் கருவூலமான சீறாவைத் தந்த கவிஞரைக் காலம் தந்த கவிஞர் எனப் பாராட்டிய கலைமாமணி, கவி.கா.மு. ஷெரீப் அவர்களின் கட்டுரை; இஸ்லாமியத் தமிழ்க் காப்பியத்தில் மேரு, ஆதி சேடன், இலக்குமி எடுத்தாளப் பாடும் உமறுவின் தனித் திறனைப் பாராட்டும் ஜே.எம். சாலி அவர்களின் கட்டுரை